சீர்கெட்ட நல்லாறு; பொறுப்பு யாரு?
சீர்கெட்ட நல்லாறு; பொறுப்பு யாரு?
சீர்கெட்ட நல்லாறு; பொறுப்பு யாரு?
ADDED : ஜூன் 13, 2025 11:06 PM

அவிநாசியில் துவங்கும் நல்லாற்றில், கழிவுநீரால் சூழப்பட்டும், இறைச்சிக்கழிவு, மற்றும் அனைத்து வித கழிவு கொட்டுமிடமாகவும் மாறியிருக்கிறது.
கோவை மாவட்டம், அன்னுார் பகுதிகளில் பெய்யும் மழைநீர், சிறு சிறு ஓடைகளாக உருவாகி, 'நல்லாறு' என்ற பெயரில் திருப்பூர் வழியாக பயணித்து, நிறைவாக, 440 ஏக்கர் பரப்பளவுள்ள, நஞ்சராயன் குளத்தை நிரப்பி, மீண்டும் பயணம் செய்து, நொய்யலில் சங்கமிக்கிறது.முந்தைய காலத்தில் நன்னீர் வழிந்தோடி, குடிநீர் மற்றும் விவசாய தேவையை, இந்த ஆற்று நீர் பூர்த்தி செய்து வந்தது.
ஆனால், தொடர் பராமரிப்பு இல்லாதது, ஆற்றோரம் பெருகிவிட்ட குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் காரணமாக, அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சாயநீரால், மாசடைந்த ஆறாக மாறியிருக்கிறது. இந்த ஆறு அவிநாசி வந்து, அங்கிருந்து பூண்டி நோக்கி பயணிக்கிறது.
தேங்கிய கழிவுநீர்
இந்த இடத்தில், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 'பைபாஸ்' சாலையை இணைக்க பாலம் கட்டப்பட்டிருக்கிறது.
இந்த பாலத்தின் அடியில் தான் நல்லாறு வழித்தடம் உள்ளது; இவ்வழியாக செல்லும் நல்லாற்று நீர், முழுமையாக வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. அதில், கழிவு மற்றும் சாய்க்கழிவு நீர் கலந்து, துர்நாற்றம் வீசிய நிலையில் நல்லாறு நீர் தேங்கி நிற்கிறது.மேலும், இறைச்சிக் கடைகளின் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும், இங்கு தான் கொடப்படுகின்றன.
இதனால், இந்த இடம் சுகாதார சீர்கேட்டின் பிறப்பிடமாகவே உள்ளது என்று சொல்வதிலும் மிகையில்லை. எனவே, பாலத்தின் அடியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்றி, நீர் தடையின்றி வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.