ADDED : பிப் 10, 2024 12:42 AM
திருப்பூர்;கொலை வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர், பி.என். ரோடு சாந்தி தியேட்டர் பின், பனியன் காம்பாக்டிங் நிறுவனம் செயல்படுகிறது. இதில், சூப்பர்வைசராக செங்கல்பட்டை சேர்ந்த ஏழுமலை பணியாற்றி வந்தார்.
இதே நிறுவனத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக், 32 பணியற்றி வந்தார். இவர் சரியாக வேலை செய்யாததால், அவரை பணியில்இருந்து, கடந்த, 2014, ஜூன், 24ல், ஏழுமலை நீக்கியுள்ளார்.பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் கார்த்திக்கு ஊர் திரும்பாததை ஏழுமலை கேட்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கார்த்திக், அங்கு கிடந்த மரக்கட்டையால், ஏழுமலையின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ஏழுமலை, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; சிகிச்சை பலனின்றி இறந்தார்.வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏழுமலையை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று, கார்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.