Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஹாக்கி: பைனல் கனவில் இந்தியா; இன்று ஜெர்மனியுடன் பலப்பரீட்சை

ஹாக்கி: பைனல் கனவில் இந்தியா; இன்று ஜெர்மனியுடன் பலப்பரீட்சை

ஹாக்கி: பைனல் கனவில் இந்தியா; இன்று ஜெர்மனியுடன் பலப்பரீட்சை

ஹாக்கி: பைனல் கனவில் இந்தியா; இன்று ஜெர்மனியுடன் பலப்பரீட்சை

ADDED : ஆக 06, 2024 06:41 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாரிஸ் : ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இன்று இந்தியா, ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இந்தியா வென்று, 44 ஆண்டுக்குப் பின், மீண்டும் பைனலுக்குள் செல்ல வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஒலிம்பிக் ஹாக்கியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதலில் போட்டிகள் லீக் முறையில் நடந்தன.

உலகத்தரவரிசையில் 'நம்பர்-7' இடத்திலுள்ள இந்திய அணி, லீக் சுற்றில் 'பி' பிரிவில் இடம் பெற்றது. 3 வெற்றி, 1 'டிரா', 1 தோல்வியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் உலகின் 'நம்பர்-2' அணியான இங்கிலாந்தை 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது. இன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, 'நம்பர்-5' இடத்திலுள்ள ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

ஒலிம்பிக் அரங்கில் 1928 முதல் 1980 வரை 8 தங்கம் வென்றது இந்தியா. இன்று மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், பைனலுக்கு முன்னேறி, 9 வது தங்கத்தை கைப்பற்ற போராடலாம். தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக (2021ல் வெண்கலம்) பதக்கம் வெல்வதை உறுதி செய்யலாம்.

துணிச்சல் ஆட்டம்


இந்திய அணியை பொறுத்தவரையில் லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை சாய்த்தது பெரும் ஊக்கம் தந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில், கடைசி 43 நிமிடம் (மொத்தம் 60 நிமிடம்) 10 வீரர்களுடன் துணிச்சலாக போராடி வென்றது இந்தியா. இந்த வெற்றிகள் இன்றைய அரையிறுதியில் இந்திய வீரர்கள் தன்னம்பிக்கையுடன் போராட மன உறுதியை கொடுக்கும்.

இதுவரை 7 கோல் அடித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், 'பீல்டு' கோல் அடிப்பதில் வல்லவரான அபிஷேக் (2 கோல்) , மீண்டும் அணிக்கு உதவ காத்திருக்கின்றனர். இத்தொடருடன் விடைபெற உள்ள 'சீனியர்' கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். காலிறுதியில் இங்கிலாந்து வீரர்களின் 10 கோல் முயற்சி, 10 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை 'பெருஞ்சுவராக' நின்று தடுத்து, இந்திய அணியை காப்பாற்றினார். இதை மீண்டும் தொடர்ந்தால் 44 ஆண்டுக்குப் பின் (இதற்கு முன் 1960, ரோம்) ஒலிம்பிக் ஹாக்கியில் பைனலுக்கு செல்வது உறுதி.

ஜெர்மனி எப்படி


'ஏ' பிரிவில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் காலிறுதிக்கு வந்தது ஜெர்மனி. இதில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. அதேநேரம், டோக்கியோ ஒலிம்பிக் (2021) வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவிடம் 5-4 என தோற்றுள்ளது ஜெர்மனி.

ஒலிம்பிக் பயிற்சிக்காக ஜெர்மனியில் விளையாடிய 6 போட்டியில் இந்தியா 5ல் வென்றுள்ளது. தவிர புரோ ஹாக்கியிலும் வென்ற அனுபவம் இந்தியாவுக்கு உதவும் என நம்பலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us