ADDED : ஜன 25, 2024 06:19 AM

பல்லடம், : பல்லடம் அருகே ஒரே பதிவு எண்ணில் இரண்டு லாரிகள் இருந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவையில் இருந்து காஸ்டிங் மண் ஏற்றியபடி லாரி ஒன்று, நேற்று காலை, பல்லடம் -- கொச்சி ரோட்டில் வந்தது. பணிக்கம்பட்டி பிரிவு அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி, ரோட்டோரத்தில் இருந்த சோளக்காட்டுக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக, ரோட்டில் நின்றிருந்த இளம்பெண்கள் இருவர் விபத்தில் இருந்து தப்பித்தனர். இதை தொடர்ந்து, விபத்துக்குள்ளான லாரியில் இருந்து காஸ்டிங் மண்ணை மாற்ற வேண்டி மற்றொரு லாரி அங்கு வந்தது.
விபத்துக்குள்ளான லாரியின் பதிவு எண்ணும் (டிஎன்- 42-0808) மற்றொரு லாரியின் பதிவு எண்ணும் ஒன்றாக இருந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார், இரண்டு லாரிக்கும் ஒரே பதிவு எண் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். லாரிகளின் ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், லோடு ஏற்றி வந்த லாரியின் இ--வே பில்லில், கிணத்துக்கடவில் இருந்து - கோவை செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனில், பல்லடத்துக்கு எதற்காக வந்தது என்ற கேள்வி எழுகிறது; இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவர்களிடம் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.