/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலை நகராட்சியுடன் 13 ஊராட்சிகள்... இணையப்போகுது!எல்லை விரிவாக்க திட்ட பணிகள் தீவிரம்உடுமலை நகராட்சியுடன் 13 ஊராட்சிகள்... இணையப்போகுது!எல்லை விரிவாக்க திட்ட பணிகள் தீவிரம்
உடுமலை நகராட்சியுடன் 13 ஊராட்சிகள்... இணையப்போகுது!எல்லை விரிவாக்க திட்ட பணிகள் தீவிரம்
உடுமலை நகராட்சியுடன் 13 ஊராட்சிகள்... இணையப்போகுது!எல்லை விரிவாக்க திட்ட பணிகள் தீவிரம்
உடுமலை நகராட்சியுடன் 13 ஊராட்சிகள்... இணையப்போகுது!எல்லை விரிவாக்க திட்ட பணிகள் தீவிரம்
ADDED : ஜன 11, 2024 11:59 PM
உடுமலை:உடுமலை நகராட்சியுடன், 9 ஊராட்சிகளுடன், குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகள்
உட்பட, 4 ஊராட்சிகளை சேர்த்து, மொத்தம், 13 ஊராட்சி களை இணைக்க அரசுக்கு
பரிந்துரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சி, 1918ல் நகராட்சியாக உருவாக்கப்பட்டு, 1983 முதல், தேர்வு நிலை நகராட்சியாக, 7.41 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது.
2011 மக்கள் தொகை அடிப்படையில், மக்கள் தொகை, 61 ஆயிரத்து, 150 ஆகும்; 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியின் சராசரி ஆண்டு வருவாய், ரூ.32 கோடியே, 11 லட்சத்து, 22 ஆயிரம் ஆகும்.
தமிழக அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், கடந்த, நவ., 23ம் தேதி அரசு ஆணையின் அடிப்படையில், நகராட்சிக்கு அருகாமையில் உள்ள ஊராட்சிகளை இணைக்க, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வாயிலாக கருத்துரு தயாரித்து, அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் தீர்மானம்
அதன் அடிப்படையில், உடுமலை நகராட்சிக்கு அருகிலுள்ள, உடுமலை ஒன்றியத்திலுள்ள, கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, குறிஞ்சேரி, சின்ன வீரம்பட்டி, கண்ணமநாயக்கனுார், 1 - 2, ராகல்பாவி, கணபதிபாளையம், பூலாங்கிணர் ஆகிய, 9 ஊராட்சிகளில், தீர்மானம் நிறைவேற்றி வழங்க வேண்டும்.
ஊராட்சிகளில் தற்போதுள்ள, மக்கள் தொகை, 3 ஆண்டு வரவு - செலவு அறிக்கை, பரப்பளவு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப கோரிய உத்தரவு அடிப்படையில், நகராட்சி சார்பில், நகர பகுதியை ஒட்டியுள்ள உடுமலை ஒன்றியம், குரல்குட்டை ஊராட்சி மற்றும் குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, புக்குளம், கோட்டமங்கலம், பொன்னேரி ஆகிய மூன்று ஊராட்சிகளையும் சேர்த்து, மொத்தம், 13 ஊராட்சிகளை இணைக்கலாம் என, தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
நகராட்சியில் சிறப்பு கூட்டம்
இதற்காக, இன்று நடக்க உள்ள நகர மன்றக்கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கலெக்டர், திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் வாயிலாக, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் வாயிலாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதன் வாயிலாக, நகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளுக்கு, குடிநீர், ரோடு, பாதாளச்சாக்கடை திட்டம், மழை நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுவதோடு, எல்லை விரிவாக்கம் செய்யும் போது, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயரும் வாய்ப்புள்ளது.
நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படும் போது, நகராட்சி எல்லை, ஏறத்தாழ, 30 சதுர கி.மீ., பரப்பளவில் அமைவதோடு, மக்கள் தொகை, 3 லட்சமாக உயரும் வாய்ப்புள்ளது.
ஊராட்சிகளை இணைக்கும் போது, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரியினங்கள் அதிகரிப்பதோடு, விவசாய நிலங்களும் உள்ள நகராட்சியாக மாறும். நகர வளர்ச்சி பரவலாகும் வாய்ப்புள்ளது.
இருப்பினும், ஊராட்சிகளை இணைக்கும் போது, அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி, இறுதி செய்ய வேண்டும்.
10 ஆண்டுக்கு முன், இதே போல், நகருக்கு அருகிலுள்ள ஊராட்சிகளை இணைத்து, விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, அரசுக்கு தீர்மானம், விரிவான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது, அருகிலுள்ள ஊராட்சிகளில், குடியிருப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது எடுக்கப்படும் விரிவாக்க நடவடிக்கையை, முழுமையாக செயல்படுத்த வேண்டும்.