ADDED : ஜூன் 24, 2024 02:12 AM

திருப்பூர்;திருப்பூர், காங்கயம் ரோடு விரி வாக்கப்பணி, சோம்பல் முறிக்கிறது.
திருப்பூர் நகரப் பகுதியில் நுழைந்து வெளியேறும் தேசிய நெடுஞ்சாலையாக காங்கயம் ரோடு உள்ளது. பெருகி வரும் வாகனப் போக்குவரத்து காரணமாக இந்த ரோட்டை அகலப்படுத்தும் வகையில், ரோடு விரிவாக்கப் பணி திட்டமிடப்பட்டது.
இப்பணிக்காக காங்கயம் கிராஸ் ரோடு பகுதியில் தனியார் நிலம் கையகப்படுத்தி, மழை நீர் வடி கால் அமைக்கப்பட்டது. இப்பகுதியில் ரோடு விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்துசி.டி.சி., கார்னர் உள்ளிட்ட பகுதியிலிருந்து தேவையான பகுதியில் மழை நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தி, ரோடு அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காங்கயம் ரோட்டில், ரோடு அகலப்படுத்தும் இடத்தில் குழி தோண்டி, மெட்டல் மற்றும் செம்மண் கொட்டி சமன்படுத்தி அதன் மீது தார் ரோடு அமைக்கும் வகையில் பணி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.
இப்பணி தற்போது சில இடங்களில் குழி தோண்டிய நிலையில் தொடர்ந்து மெட்டல் போட்டு சமன் செய்யப்படாமல், ஒரு பகுதியில் சமன் செய்தும் தார் ரோடு போடப்படாமல் கிடப்பில் போட்டுக் கிடக்கிறது.ரோடு விரிவாக்கப் பணி மந்தகதியில் நடப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு அவதி நிலவுகிறது.
வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ரோடு போடும் பணியை விரைந்து மேற்கொண்டு முடிக்க வேண்டும்.