Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மத்திய அரசின் உதவிக்கரம் நீளுமா? தொழில் மீண்டெழ பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு

மத்திய அரசின் உதவிக்கரம் நீளுமா? தொழில் மீண்டெழ பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு

மத்திய அரசின் உதவிக்கரம் நீளுமா? தொழில் மீண்டெழ பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு

மத்திய அரசின் உதவிக்கரம் நீளுமா? தொழில் மீண்டெழ பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 16, 2024 12:42 AM


Google News
திருப்பூர்:கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக, தொடர்ச்சியான சவால்களுடன் மல்லுக்கட்டிய பின்னலாடை தொழில் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க துவங்கி உள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு, சரியான இந்நேரத்தில், மிகத்தேவையான உதவிகளை செய்தால், பனியன் தொழில் வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. 3வது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி அரசு, இனியாவது பனியன் தொழிலை பாதுகாக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

போராடி ஓய்ந்துபோன குறு, சிறு நிறுவனங்கள், மீண்டும் நின்று தொழில் நடத்திட, அவசரகால கடன் திட்டம் என்ற அடிப்படையில், குறைந்தவட்டியில், கடன் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

பின்னலாடை வாரியம்


பின்னலாடை தொழிலில் ஏற்படும் சறுக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வசதியாக, தேசிய பின்னலாடை தொழில் வளர்ச்சி வாரியத்தை அமைக்க வேண்டும். தொழில்நுட்ப மேம்பாடு என்பது, தற்போது மிகமிக அவசியம். எனவே, 'ஏ-டப்' திட்டத்தை முன் தேதியிட்டு அறிவித்து, மீண்டும் மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

உற்பத்தி சார் இணைப்பு மானியம் திட்டம், குறு, சிறு தொழில்களும் பயன்பெறும் வகையில், நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், எளிமையாக கடன் பெறும் திட்டத்தை வழங்க வேண்டும்.

ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி மானியத்தை, 3 மற்றும் 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அடுத்த கட்டமாக ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிபெற, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலமாக, திருப்பூரின் ஆண்டு வர்த்தகத்தில், 20 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.

வரியில்லா ஒப்பந்தம்


பனியன் மற்றும் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு, மின் கட்டணம் பெரிய சுமையாக மாறியுள்ளது. மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டுக்கு தயாராக இருப்பதால், மத்திய அரசு பசுமை சார் மரபுசாரா எரிசக்தி திட்டத்தை செயல்படுத்த அதிகபட்ச மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

பருத்தி ஆடை உற்பத்தியுடன், மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியும், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அவசியம். எனவே, கடந்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்திருந்ததை போல், திருப்பூரில் புதிய ஜவுளி ஆராய்ச்சி மையத்தை அமைத்து, ஆய்வுகள் மூலமாக வழிகாட்டலாம்.

தொடர் சோதனைகளால், பனியன் தொழில் வெளிமாநிலங்களுக்கு நகர்ந்து விடுமோ என்ற அச்சம் இன்றும் மாறவில்லை. அதுமட்டுமல்ல, தாங்க முடியாத சோதனைகளால், குறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்ட வரலாறும் உண்டு. இனியும் தொழில் நடத்த முடியாது என்று, குறு, சிறு தொழில்துறையினர் விரக்தியில் இருக்கின்றனர்.

ஒட்டுமொத்த பனியன் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், கொரோனா கால உதவி போல், அவசரகால கடன் திட்ட கொள்கையை உருவாக்கி, 'பூஸ்ட் அப்' செய்ய, மத்திய அரசு மனமிறங்க வேண்டும்.

பனியன் தொழில் மீண்டெழும் என்று, நம்பிக்கை தளராமல் காத்திருக்கும் ஒட்டுமொத்த திருப்பூர் மக்களுக்கும், புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்பார்ப்புகள் நிறைவேற ஆவன செய்ய வேண்டும்!

ஒட்டுமொத்த பனியன் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், கொரோனா கால உதவி போல், அவசரகால கடன் திட்ட கொள்கையை உருவாக்கி, 'பூஸ்ட் அப்' செய்ய, மத்திய அரசு

மனமிறங்க வேண்டும்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us