Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சர்வதேச தரத்துடன் உள்கட்டமைப்பு உயருமா? 'பின்னலாடை மாநகரம்' மேம்பாடு புதிய அரசிடம் பெரும் எதிர்பார்ப்பு

சர்வதேச தரத்துடன் உள்கட்டமைப்பு உயருமா? 'பின்னலாடை மாநகரம்' மேம்பாடு புதிய அரசிடம் பெரும் எதிர்பார்ப்பு

சர்வதேச தரத்துடன் உள்கட்டமைப்பு உயருமா? 'பின்னலாடை மாநகரம்' மேம்பாடு புதிய அரசிடம் பெரும் எதிர்பார்ப்பு

சர்வதேச தரத்துடன் உள்கட்டமைப்பு உயருமா? 'பின்னலாடை மாநகரம்' மேம்பாடு புதிய அரசிடம் பெரும் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 05, 2024 12:37 AM


Google News
திருப்பூர்:''திருப்பூர் கிளஸ்டரிலிருந்து வசூலிக்கப்படும் வரி வருவாயில் இருந்து, 1 சதவீதத்தை, திருப்பூர் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும். இதன்மூலம், திருப்பூர் நகரம் சர்வதேச தரத்துக்கு உயர வாய்ப்பு கிடைக்கும்'' என்று ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கையை, புதிதாக அமைய உள்ள மத்திய அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பின்னலாடை கிளஸ்டர், நாட்டிலேயே அதிக அன்னிய செலாவணியை ஈர்க்கும் துறையாக விளங்குகிறது. மத்தியில் அமையும் புதிய அரசு, திருப்பூர் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்; திருப்பூரின் எம்.பி., பனியன் தொழிலை மேம்படுத்த, தனது சேவையை தொடர வேண்டும் என்பது தொழில்துறையினர் எதிர்பார்ப்பு.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களாக இயங்கும் பின்னலாடை தொழிலில், ஏற்றுமதி வர்த்தகம், ஆண்டுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய்; உள்நாட்டு வர்த்தகம், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கும் நடக்கிறது.

ஒட்டுமொத்த பின்னலாடைத் தொழில் வாயிலாக, எட்டு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியில், 70 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பி.எல்.ஐ., - 2.0 திட்டம்


உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தால், பெரிய நிறுவனங்கள் மட்டும் பயனடைந்தன. புதிய திட்டத்தில், 15 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கி, முதலீட்டை விட மூன்று மடங்கு அதிக வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், குறு, சிறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

'டப்' திட்டத்துக்கானமாற்று அவசியம்


தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் (டப்), ஒட்டுமொத்த ஜவுளித்துறை வளர்ச்சிக்கு மிக அவசியம். தரமான ஆடை தயாரிப்பில், இறக்குமதி இயந்திர பயன்பாடு மிக அவசியம். அதிநவீன இயந்திரம் இருந்தால், ஆர்டர் அதிகம் கிடைக்கும். நிலுவையில் உள்ள ஊக்கத்தொகை கிடைக்கும் வகையில், 'டப்' திட்டத்துக்கு மாற்றாக, சரியான திட்டம் அறிவிக்கப்பட வேண்டும்.

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்பிரிட்டன், ஐரோப்பியா, நியூசிலாந்து நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கை வேகப்படுத்த வேண்டும். வளைகுடா நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம் உருவானால், இந்திய ஏற்றுமதி வர்த்தகம் உயரும்.

வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடு


வங்கதேசத்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், இந்திய உள்நாட்டு சந்தைகளில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தைகளில், வங்கதேச ஆடைகள் விலை குறைவாக விற்கப்படுவதால், உள்நாட்டு தயாரிப்பு ஆடைகள் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. நிறைவாக, 2,500 கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடைகள், வங்கதேசத்தில் இருந்து இறக்குமதியாகியுள்ளன. உடனடியாக, புதிதாக அமையும் அரசு, வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

வட்டி சமன்படுத்தும் திட்டம்


பல்வேறு வரிகளால், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான செலவு அதிகரித்துள்ளது. எனவே, வட்டி சமன்படுத்தும் திட்டத்தில் கூடுதல் சலுகை வேண்டும். எனவே, 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி மானியத்தை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 5 சதவீதமாகவும்; மற்ற நிறுவனங்களுக்கு, 3 சதவீதமாகவும் உயர்த்த வேண்டும். சிறு ஏற்றுமதியாளர்களுக்கு, புதிய சந்தை மானியத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

பசுமை ஆற்றல் மானியம்


திருப்பூர் தொழில் நகரம், பல ஆண்டுகளாகவே, கழிவுநீர் சுத்திகரிப்பு, மரம் வளர்ப்பு, மறுசுழற்சி, மரபுசாரா எரிசக்தியில் முன்னோடியாக இருக்கிறது. அதற்காக, அதிக அளவு முதலீடு செய்துள்ளன; இருப்பினும், அதற்கான அங்கீகாரம் இல்லை. எனவே, திருப்பூரின் பசுமை ஆற்றலுக்கு சரியான ஊக்குவிப்பு அவசியம்.

சோலார் மின் திட்டத்தை ஊக்குவிப்பதன் வாயிலாக, குறு, சிறு நிறுவனங்களின் மின் கட்டண சுமையை குறைக்கலாம். அதன்படி, மரபுசாரா எரிசக்தி கட்டமைப்பு நிறுவ, பொது சுத்திகரிப்பு மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

அவசர கால கடன்


கொரோனா காலத்தில் அவசரகால கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அவசரகால கடன் திட்டத்தில் பெற்ற கடனை திருப்பி செலுத்த, மேலும் ஓராண்டு அவகாசம் வழங்க வேண்டும்.

பாதுகாப்பான வீட்டு வசதி


திருப்பூர் பனியன் தொழிலில், பல்வேறு மாநிலத்தவரும், வெளிமாவட்ட தொழிலாளர்களும் பங்கேற்றுள்ளனர். சரியான வீட்டு வசதி இல்லாததால், தொழிலாளர் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். எனவே, பாதுகாப்பான வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அனைத்து வசதிகளுடன், தங்கும் விடுதி மற்றும் அடுக்குமாடி வீட்டு வசதியை வழங்க வேண்டும்.

போக்குவரத்து மானியம்


தொழிற்சாலையில் இருந்து, 50 முதல் 60 கி.மீ., தொலைவில் உள்ள தொலைதூர கிராமங்களில் இருந்து தொழிலாளரை அழைத்துவர, தலா 85 ரூபாய் செலவிடப்படுகிறது. குறிப்பாக பெண் தொழிலாளருக்காக இயக்கப்படுகிறது. இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு, போக்குவரத்து மானியம் வழங்கி உதவ வேண்டும்.

புதிய ஆராய்ச்சி மையம்


திருப்பூர் பின்னலாடைத்துறை, பருத்தி பின்னலாடை பொருட்களை உற்பத்தி செய்கிறது. செயற்கை நுாலிழை, கலப்பு ஆடைகள், நவின செயற்கை நுாலிழை துணி உற்பத்தி என்பது, எதிர்கால வளர்ச்சிக்கு அவசியம். அந்தவகையில், இத்தகைய புதுமைகளை செயல்படுத்தும் வகையில், புதிய ஆராய்ச்சி மையம் திருப்பூரில் அமைய வேண்டும்.

பருத்தி உற்பத்தி முயற்சி


தேசிய பருத்தி உற்பத்தியில், தமிழகத்தின் பங்களிப்பு, 2 சதவீதம் மட்டுமே; நுாற்புத்திறன், 55 சதவீதமாக உள்ளது. இருப்பினும், தமிழகத்தில் பருத்தி சாகுபடி வெகுவாக குறைந்துவிட்டது. வெளியே இருந்து, பருத்தி பஞ்சை வாங்கி வர அதிக போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது. எனவே, தமிழகத்தில் மீண்டும் பருத்தி உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்தை தயாரிக்க வேண்டும். பருத்தி இறக்குமதிக்கான, 11 சதவீத வரியை முழுமையாக நீக்க வேண்டும்.

திறன் மேம்பாட்டு மானியம்


ஜவுளித்துறை திறன் மேம்பாட்டுக்கு, பல கட்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இருப்பினும், திறமையான தொழிலாளர்களை உருவாக்க, ஆண்டுக்கு, 20.57 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இந்தசெலவில், 50 சதவீதத்தை அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப ஜவுளி


தொழில்நுட்ப ஜவுளித்துறையில் திருப்பூர் கிளஸ்டர் அதிக கவனம் செலுத்தவில்லை. இத்துறையில் உள்ள மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை உணர்ந்து, ஊக்குவிக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப வசதிகளை மாவட்டம் வாரியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மூலதன மானியம்


தமிழகத்தில், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி அலகுகளை உருவாக்க, மூலதன மானியமாக, 40 சதவீதம் வழங்க வேண்டும். தொழிற்சாலை, இயந்திரங்கள் விலையில், இம்மானியத்தை பெற, ஏற்கனவே இயங்கும் அலகுகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம், கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லுாரிகள் வாயிலாக, புதிய தொழில்நுட்ப பகிர்வு கிடைக்க வேண்டும். ஒட்டுமொத்த திட்ட செலவில், 25 சதவீதம் நிதி உதவி அளிக்கப்பட வேண்டும்; 100 சதவீதம் முத்திரைத்தீர்வையில் இருந்து விலக்களிக்க வேண்டும்.

பெண் தொழில் முனைவோர்


நாட்டின் மொத்த தொழிலாளர்களில், 43 சதவீதத்தினர் பெண்கள் உள்ளனர். தமிழகத்திலும், 10 சதவீதம் பெண் தொழில் முனைவோர் உள்ளனர். திருப்பூர் கிளஸ்டரில், பெண்கள் பங்களிப்பை ஊக்குவிக்கவும், வழங்கவும், பெண்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும்; ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, பெண் தொழில் முனைவோரை உருவாக்க, மானிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

திருப்பூர் வருவாயில் 1 சதவீதம்


திருப்பூர் கிளஸ்டரிலிருந்து வசூலிக்கப்படும் வரி வருவாயில் இருந்து, 1 சதவீதத்தை, திருப்பூர் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும். இதன்மூலம், திருப்பூர் நகரம் சர்வதேச தரத்துக்கு உயர வாய்ப்பு கிடைக்கும். திருப்பூரில் இருந்து, முக்கிய நகரங்களுக்கு, நான்கு முற்றும் ஆறு வழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

திருப்பூரின் வடக்கு - தெற்கு பகுதிகளை இணைக்க, ஒரு ரயில்வே மேம்பாலம் மட்டுமே உள்ளது. புதிய பாலம் கட்டப்படுகிறது. இருப்பினும், நொய்யல் ஆறு மற்றும் ரயில்வே பாதைகளை கடந்து சென்றுவர, புதிய பாலங்கள் கட்டமைக்கப்பட வேண்டும்.

சோமனுாரில் இருந்து, ரயில்வே பாதையுடன் இணைந்தபடி புதிய ரோடு வசதி செய்யப்பட வேண்டும். வஞ்சிபாளையத்தில் கூட்ஸ் ெஷட் அமைவதால், புதிய ரோடு, பாலம் அமைந்தால், மக்கள் பயன்படுத்தும் ரோடுகளில் நெரிசல் குறையும்.

திருப்பூர் நகரப்பகுதியில் மட்டும், ரயில்வே பாதைகள் மற்றும் நொய்யல் ஆற்றின் குறுக்கே, முதல்கட்டமாக, ஐந்து பாலங்கள் கட்டப்பட வேண்டும்.

மெட்ரோ ரயில் பாதை

கோவை மாநகரில் இருந்து, நீலம்பூர் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. திருப்பூர் -கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். சேலம் -கோவை வரை, விரைவு பாசஞ்சர் ரயில் முறையாக இயக்க வேண்டும். திருப்பூரில் சிறப்பு பாடப்பிரிவுகளில், பின்னலாடை தொழில் சார்ந்த ஐ.ஐ.டி., அமைக்க வேண்டும்.

சிறப்பு கவனம் தேவை

மத்தியில் அமையும் புதிய அரசு, திருப்பூர் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். புதிய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில், திருப்பூருக்கான புதிய அறிவிப்புகள் கட்டாயம் இடம்பெற வேண்டுமென, எங்களை சந்தித்த எம்.பி., வேட்பாளர்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளோம்.

- சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.

பின்னலாடை வாரியம் அமையுமா?

பின்னலாடை தொழிலில், ஒவ்வொரு 10 ஆண்டுகள் இடைவெளியில் புதிய பிரச்னைகள் சந்திக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டுகளில் சந்திக்கும் பிரச்னைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்து தீர்வு பெற தாமதம் ஏற்படுகிறது. ஒட்டுமொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக நலன்கருதி, மத்திய அரசு அதிகாரிகள் பங்கெடுக்கும் பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும்.



செயற்கை நுாலிழை ஆடைகளுக்கு முக்கியத்துவம்

பருத்திக்கு மாற்றாக, பல்வேறு நாடுகளும், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் முன்னோடியாக உள்ளன. மறுசுழற்சி தொழில்நுட்பத்திலும், இந்தியா தற்போது முன்னேறியுள்ளது. வங்கதேசம், வியட்நாம், கம்போடியா, சீனா உள்ளிட்ட நாடுகள், செயற்கை நுாலிழை ஆடை ஏற்றுமதியில்வளர்ச்சி பெற்றுள்ளன. இந்தியாவில், 2030ம் ஆண்டுக்குள், மொத்த ஏற்றுமதியில், 40 சதவீதத்தை செயற்கை நுாலிழை ஆடைகள் பங்களிப்பு கிடைக்கும். அதற்கான, முதலீட்டு மானியத்தை தடையின்றி வழங்க அரசு திட்டமிட வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us