/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புதிய எம்.பி., யார்? தொழில்துறையினர் ஆர்வம் புதிய எம்.பி., யார்? தொழில்துறையினர் ஆர்வம்
புதிய எம்.பி., யார்? தொழில்துறையினர் ஆர்வம்
புதிய எம்.பி., யார்? தொழில்துறையினர் ஆர்வம்
புதிய எம்.பி., யார்? தொழில்துறையினர் ஆர்வம்
ADDED : ஜூன் 04, 2024 12:23 AM
இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தின் தலைநகராக விளங்குவது திருப்பூர். இங்கிருந்து, உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு, பின்னலாடைகள் ஏற்றுமதியாகின்றன. அன்னிய செலாவணியை ஈட்டும் முக்கிய தொழில் நகரமான திருப்பூர் வளர்ச்சியில், மத்திய அரசின் பங்களிப்பும், பொறுப்பும் அதிகம்.
ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தக ரீதியான சோதனைகளை கடந்து வெற்றி பெற, மத்திய அரசின் ஊக்குவிப்பும், உதவியும் அத்தியாவசியமாகிறது. எந்த தொழிலாக இருந்தாலும், திடீர் சவால்கள் எழுவது சகஜம்; பனியன் தொழிலிலும் தேசிய அளவிலான பிரச்னைகள் எழுகின்றன; மத்திய அரசின் நேரடி உதவியும் அவசியம்.
அவ்வகையில், மத்திய அரசுக்கும், திருப்பூர் தொழில்துறைக்கும் இணைப்பு பாலமாக இருப்பது எம்.பி.,கள் தான். திருப்பூர், கோவை எம்.பி.,கள், பனியன் தொழிலின் எதிர்காலம் சிறப்பாக இருக்க, மக்கள் பிரதிநிதிகளாக இருந்து, தொழில் வளர்ச்சிக்கு தோள்கொடுக்க வேண்டும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், மத்திய அமைச்சர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால், பிரச்னைகளை உடனுக்குடன் மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். மத்திய அதிகாரிகள், அமைச்சர்கள் வாயிலாக தீர்வு பெறும் வல்லமையும் உள்ளது.
இருப்பினும், தொகுதி சார்ந்த பிரச்னைகளை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து, தொழில் வளம் சிறக்க செய்யும் தீர்வுகளையும், உதவிகளையும் பெற்றுத்தருவது, தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,யின் கடமை.
கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, ஈரோடு என, ஐந்து எம்.பி.,கள் திருப்பூர் மாவட்டத்துக்கு தேர்வானாலும், பனியன் தொழிலுக்காக, திருப்பூர் மற்றும் கோவை எம்.பி.,கள் குரல்கொடுக்க வேண்டியது அவசியம். அவ்வகையில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையான இன்று, தொழில்துறையினரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஓட்டுப்பதிவுக்கு பிறகு, தங்கள் வேலையை கவனித்துக்கொண்டிருந்தவர்கள், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறியவும், தங்கள் எம்.பி., யார் என்பதை அறியவும், ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பல்வேறு சோதனைகளை சந்தித்து, நெருப்பாற்றில் நீந்தி கரைசேர்வது போல், பனியன் தொழில் ஒரு நிலையை அடைந்துள்ளது. சர்வதேச சந்தைகளில், வளர்ச்சி நிலையை அடைய, புதிதாக தேர்வாகும் எம்.பி.,க்கள் உதவ வேண்டும்