ADDED : ஜூலை 07, 2024 11:21 PM

''நல்ல கல்லுாரியையும், திறமையான மாணவர்களையுமே நிறுவனங்கள் தேடி வருகின்றன'' என்று கோவை கற்பகம் குழுமங்களின் பிராண்டிங் மற்றும் மாணவர் சேர்க்கைப்பிரிவு தலைவர் சுப்புராஜ் பேசினார்.
கோவை, கற்பகம் குழுமங்களின் பிராண்டிங் மற்றும் மாணவர் சேர்க்கை பிரிவு தலைவர் சுப்புராஜ் பேசியதாவது:
சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது உங்கள் கையில் தான். எந்தக் கல்லுாரியில் படிக்க போகிறீர்கள், என்ன படிப்பை தேர்வு செய்ய போகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். படிப்பதோடு மட்டும் வேலை உறுதியாகி விடாது. படிப்போடு சேர்த்து திறமைகளும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல கல்லுாரியையும், திறமையானவர்களையும் தேடியே நிறுவனங்கள் வருகின்றன.
இவ்வாறு, சுப்புராஜ் பேசினார்.
யார் ஜெயிப்பார்கள்?
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ் பேசியதாவது:
கொரோனாவுக்கு பின் சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறி, இந்தியாவில் தொழில் துவங்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. புதிய நிறுவனங்களால் இன்ஜினியரிங் துறை முன்னேறி, அதிக வேலைவாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. கட்டுமானம், உள்கட்டமைப்பு, கணினி தேவை உள்ளிட்டவற்றில் நாட்டை கட்டமைக்க இன்ஜினியர் அதிகம் வேண்டும். தொழில்நுட்பம் 'அப்டேட்' ஆகி கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப தயாராகிறவர்கள் ஜெயிக்க முடியும்.
இவ்வாறு, ரமேஷ் பேசினார்.