Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நாற்றுப்பண்ணைகளில் தக்காளி நாற்றுக்கள் தேக்கம்; வெயில், விலை சரிவால் சிக்கல்

நாற்றுப்பண்ணைகளில் தக்காளி நாற்றுக்கள் தேக்கம்; வெயில், விலை சரிவால் சிக்கல்

நாற்றுப்பண்ணைகளில் தக்காளி நாற்றுக்கள் தேக்கம்; வெயில், விலை சரிவால் சிக்கல்

நாற்றுப்பண்ணைகளில் தக்காளி நாற்றுக்கள் தேக்கம்; வெயில், விலை சரிவால் சிக்கல்

ADDED : மார் 13, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
உடுமலை; வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, விலை சரிவு உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால், உடுமலை பகுதிகளில் உள்ள நாற்றுப்பண்ணைகளில், பல லட்சம் நாற்றுக்கள் தேக்கமடைந்துள்ளன.

காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு உதவும் வகையில், நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு, 20 முதல் 30 நாட்கள் வரை வளர்ந்த நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி மற்றும் அருகாமையிலுள்ள மற்ற பகுதிகளில், 60க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகள் அமைந்துள்ளது. ஒவ்வொன்றும், தலா, 3 லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும்.

இப்பண்ணைகளில், தக்காளி, கத்தரி, மிளகாய், காலிப்ளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்பண்ணைகளிலிருந்து, தக்காளி நாற்று, 22 நாட்களிலும்,மற்ற காய்கறி நாற்றுக்கள், 30 நாட்களிலும் விவசாயிகள் வாங்கி நடவுசெய்கின்றனர்.

உடுமலை பகுதிகளில், காய்கறி சாகுபடியில் தக்காளி நாற்றுக்களே பிரதானமாக உள்ளது. நடப்பு சீசனில் தக்காளி சாகுபடி செய்தால், மற்ற பகுதிகளிலிருந்து வரத்து இல்லாமல், உடுமலை பகுதி தக்காளிக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தயாராக இருந்தனர். இந்நிலையில், நடப்பாண்டு, கோடை காலம் முன்னதாகவே துவங்கியது போல், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்களுக்கே நீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது.

அதே போல், வெயிலுக்கு தாங்காமல் செடிகள் காய்வது, காய்கள் பாதிப்பது, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், தக்காளி மகசூலும் பெருமளவு பாதித்துள்ளது. மேலும், தற்போது தக்காளி விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, ரூ. 20 முதல், 80 வரை மட்டுமே விற்று வருவதால், நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால், தக்காளி சாகுபடி மேற்கொள்ள தயாராக இருந்த விவசாயிகள் சாகுபடி பணியை நிறுத்தியுள்ளனர்.

இதனால், ஒவ்வொரு நாற்றுப்பண்ணைகளிலும், ஒரு லட்சம் முதல், 5 லட்சம் நாற்றுக்கள் வரை தேக்கமடைந்துள்ளது. இந்த நாற்றுக்களை, 25 முதல் 30 நாட்களில், வயல்களில் நடவு செய்யாவிட்டால், முழுமையாக வீணாகும் நிலையும், பல லட்சம் ரூபாய் நிதி இழப்பும் ஏற்படும் சூழல் உள்ளது.

நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், 'வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, விலை சரிவு, கடும் வெயில் காலத்தில் தக்காளி செடிகளை காப்பாற்றுவதில் உள்ள சிக்கல் உள்ளிட்ட காரணங்களினால், விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளவில்லை. இதனால், தற்போது நாற்றுப்பண்ணைகளில், லட்சக்கணக்கான நாற்றுக்கள் தேக்கமடைந்து, வீணாகியுள்ளது. அடுத்து துவங்கும் கோடை மழையை பொறுத்து, விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொள்வர்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us