Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குறைகளுக்கு பஞ்சமில்லை... தீர்வு கண்டால் துன்பமில்லை!

குறைகளுக்கு பஞ்சமில்லை... தீர்வு கண்டால் துன்பமில்லை!

குறைகளுக்கு பஞ்சமில்லை... தீர்வு கண்டால் துன்பமில்லை!

குறைகளுக்கு பஞ்சமில்லை... தீர்வு கண்டால் துன்பமில்லை!

ADDED : ஜூலை 29, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்:பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கோரிக்கைகளை மனுவாக எழுதி வழங்கினர். கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., ஜெய்பீம் ஆகியோர், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு


பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் பூபாலன் மற்றும் பொதுமக்கள்:

கரைப்புதுார் ஊராட்சியில், 2 மதுக்கடைகளும், ஒரு தனியார் மதுக்கூடமும் செயல்படுகிறது. இந்நிலையில், லட்சுமி நகர் பகுதியில் மேலும் ஒரு மதுக்கடை அமைத்தால், பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர், தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்; எனவே, மதுக்கடை அமைக்க தடைவிதிக்கவேண்டும்.

l குடிமங்கலம் கிராமத்திலிருந்து 2 கி.மீ., தொலைவில், டாஸ்மாக் மதுக்கடை (கடை எண்: 2330) செயல்படுகிறது. இதனை எங்கள் கிராமத்துக்கு அருகாமையில் மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கோவில், பள்ளிக்கூடம், குடியிருப்பு நிறைந்த பகுதிக்கு மதுக்கடையை இடம்மாற்றினால், மக்களுக்கு பெரும் இன்னல் ஏற்படும்; ஆகவே, மதுக்கடையை இடம்மாற்றக்கூடாது, என அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

சமுதாய நலக்கூடம் கட்டணும்!


மா.கம்யூ., முத்துசெட்டிபாளையம் கிளை செயலாளர் அவிநாசியப்பன்:

அவிநாசி பேரூராட்சி, முத்துசெட்டிபாளையத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2016, ஜூலையில், சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், எட்டு ஆண்டுகளாகியும் பணிகள் துவங்கவில்லை. எனவே, சமுதாய நலக்கூடம் உடனே கட்ட வேண்டும்.

கால்நடை மருந்தகம் வேண்டும்


தமிழ்நாடு மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர்:

பொங்குபாளையத்தில் ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, எட்டு கிலோ மீட்டர் துாரத்துக்கு செல்லவேண்டியுள்ளதால் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. பொங்குபாளையத்தில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது; அந்த இடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

குடிநீர் சப்ளை சீராக்கணும்!


காளம்பாளையம் மா.கம்யூ., கிளை செயலாளர் விஸ்வநாதன்:

திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட10 ஊராட்சிகளை சேர்ந்த குடியிருப்பு பகுதி மக்களுக்கு, தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் ஆற்று குடிநீர் வழங்கும் வகையில், கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுகிறது. அதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

இந்த திட்டத்தில், பொங்குபாளையம் ஊராட்சி, 3 மற்றும் 8வது வார்டை சேர்ந்த சில பகுதிகள் விடுபட்டுள்ளன. ஏற்கனவே, 2,3வது திட்ட குடிநீரும் சரிவர கிடைப்பதில்லை. பொங்குபாளையத்தில் விடுபட்ட பகுதிகளை சேர்ந்து, குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு அனுப்பியுள்ளோம். விடுபட்ட பகுதி குடியிருப்புகளை இணைத்து குடிநீர் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சாலையை சீரமைக்க வேண்டும்


அவிநாசி, புஞ்சை தாமரைக்குளம் பொதுமக்கள்:

புஞ்சை தாமரைக்குளம் ஏ.டி., காலனியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். தாமரைக்குளக்கரையில் அமைந்துள்ள மயானத்துக்கு செல்லும் வழியில் முட்புதர்கள் சூழ்ந்துள்ளன. இதனால், 3 கி.மீ., சுற்றி தான் மயானத்துக்கு செல்ல முடிகிறது. தாமரைக்குளம், அண்ண மார் கோவில் முதல் ஊருக்கு செல்லும் சாலையை சரி செய்து கொடுக்கவேண்டும்.

மாற்றுத்திறனாளிக்கு கலெக்டர் உறுதி


திருமுருகன்பூண்டியை சேர்ந்த யுவராணி, 47; மாற்றுத்திறனாளி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கேட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். பாலகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

உரிய கட்டண தொகையை செலுத்தியதையடுத்து, திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் பாலகம் பெட்டி வைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை அனுமதிஅளித்தது. ஆனால், திருமுருகநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் விமலா, கோவிலுக்கு சொந்தமான இடம் எனக் கூறி, பாலகம் அமைக்க அனுமதி மறுத்து வருகிறார்.

இதனால் மன வேதனை அடைந்த யுவராணி, கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு அளித்தார்; அனைத்து அரசுத்துறையினரும் அனுமதி வழங்கிய நிலையில், திருமுருகநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் மட்டும் பாலகம் அமைக்க தடை போடுவது குறித்து விளக்கி கூறினார். பாலகம் அமைக்க அனுமதி அளித்து, வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக்கொடுங்கள் என, முறையிட்டார். யுவராணி கூறியதை கேட்ட கலெக்டர், ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

பயனாளி தேர்வில் குளறுபடி?


சேவூரை சேர்ந்த பெண்கள் அளித்த மனு:

சேவூர் ஊராட்சியில், குடிசை வீடு அமைத்து குடியிருந்து வருகிறோம். கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க கோரி மனு அளித்தோம். எங்கள் பகுதியில், கனவு இல்ல திட்ட பயனாளிகள் தேர்வில் குளறுபடிகள் நடக்கின்றன. ஏற்கனவே வீடு உள்ளோரை பயனாளிகளாக இணைக்கின்றனர். வீடுகள் தோறும் கள ஆய்வு நடத்தி, கனவு இல்ல திட்டத்துக்கு தகுதியான பயனாளிகளை சேர்க்கவேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், பொங்குபாளையத்தை சேர்ந்த முத்தாள் என்பவரும், கனவு இல்ல பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் கூறி மனு அளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us