ADDED : ஜூன் 01, 2024 12:08 AM

பல்லடம்;பல்லடம் அருகே காரணம்பேட்டை - பருவாய் செல்லும் ரோட்டில் உள்ளது ஜெ.கே.என்., கார்டன். இங்கு, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இரண்டு ஆண்டுக்கு முன் இங்கு திட்டமிடப்பட்ட ரோடு பணி, கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
ஜெ.கே.என்., கார்டன் பகுதி வழியாக செல்லும் ரோடு, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், காரணம்பேட்டை - - கரடிவாவி செல்லும் நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் இதை மாற்று வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் தார் சாலை அமைக்க கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் திட்டமிடப்பட்டு பணிகளும் துவங்கப்பட்டன. ஜல்லிக்கற்கள் பதிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு, ரோடு பணி கிடப்பில் போடப்பட்டது. ஜல்லிகள் அனைத்தும் பெயர்ந்து ரோடு முழுவதும் பரவி கிடக்கின்றன.
இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பலர் தடுமாறிச் சென்று கீழே விழுந்து காயமடைகின்றனர். எந்த திட்டத்தின் கீழ் ரோடு பணி துவங்கியது? இதன் மதிப்பீடு என்ன, ரோட்டின் அளவு, ஒப்பந்ததாரர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதனால், எந்த திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கிறது என்ற விவரமும் தெரியவில்லை. கிடப்பில் போடப்பட்டுள்ள ரோடு பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.