/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காலி குடங்களுடன் மறியல் போராட்டம்: கொண்டம்பட்டி மக்களால் பரபரப்பு காலி குடங்களுடன் மறியல் போராட்டம்: கொண்டம்பட்டி மக்களால் பரபரப்பு
காலி குடங்களுடன் மறியல் போராட்டம்: கொண்டம்பட்டி மக்களால் பரபரப்பு
காலி குடங்களுடன் மறியல் போராட்டம்: கொண்டம்பட்டி மக்களால் பரபரப்பு
காலி குடங்களுடன் மறியல் போராட்டம்: கொண்டம்பட்டி மக்களால் பரபரப்பு
ADDED : ஜூலை 24, 2024 12:39 AM

உடுமலை;குடிமங்கலம் ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள் வசவநாயக்கன்பட்டி, வேலாயுதகவுண்டன்புதுார். இக்கிராமங்களுக்கு திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், பல வாரங்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை, 7:00 மணிக்கு, உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு, கொண்டம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர், குடிமங்கலம் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிப்பதே இல்லை. போர்வெல் தண்ணீரும் வருவதில்லை. இந்த நிலை ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கிறது.
காலை எழுந்ததும், குடிநீருக்காக பல கி.மீ., துாரம் செல்ல வேண்டியிருப்பதால், விவசாய கூலி தொழிலாளர்கள் வேலைக்கு கூட செல்ல முடிவதில்லை. ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமத்துக்கு தட்டுப்பாடு இல்லாமல், குடிநீர் வினியோகிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். இவ்வாறு, கிராம மக்கள் தெரிவித்தனர்.
மாநில நெடுஞ்சாலையில் போராட்டம் நடந்ததால், பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
குடிமங்கலம் போலீஸ் தரப்பில், 'போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல், போராட்டத்தை நடத்துங்கள்; உங்கள் பிரச்னை சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,' என்றனர். இதையடுத்து, ரோட்டோரத்தில் அமர்ந்து மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
'கிராமத்திலுள்ள போர்வெல் உடனடியாக சீரமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகிக்கப்படும்; திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்திலும் போதுமான குடிநீர் பெறப்பட்டு, வினியோகம் சீரமைக்கப்படும்,' என ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.
வாக்குறுதியில் சமாதானம் அடைந்த மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். சாலை மறியல் போராட்டத்தால், மாநில நெடுஞ்சாலையில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.