/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பஸ் ஏற வேண்டிய அவலம் உயிரைக் கையில் பிடித்து...! கண்ணீர் வடிக்கும் மாணவியர்பஸ் ஏற வேண்டிய அவலம் உயிரைக் கையில் பிடித்து...! கண்ணீர் வடிக்கும் மாணவியர்
பஸ் ஏற வேண்டிய அவலம் உயிரைக் கையில் பிடித்து...! கண்ணீர் வடிக்கும் மாணவியர்
பஸ் ஏற வேண்டிய அவலம் உயிரைக் கையில் பிடித்து...! கண்ணீர் வடிக்கும் மாணவியர்
பஸ் ஏற வேண்டிய அவலம் உயிரைக் கையில் பிடித்து...! கண்ணீர் வடிக்கும் மாணவியர்
ADDED : ஜூலை 06, 2024 06:22 PM

திருப்பூர்:போக்குவரத்து போலீசாரின் அறிவுரையைப் பின்பற்றாமல், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்பில், பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தப்படுவதால், மாணவியர் மற்றும் பயணிகள் ஓடிச்சென்று ஏறும் நிலை உள்ளது. தினமும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பஸ்சில் ஏற வேண்டியுள்ளது என்று மாணவியர் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்பில், அதிகளவில் பயணிகள் பஸ் ஏறி, இறங்குகின்றனர். ஸ்டாப் அருகில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஏராளமான மாணவியர் இங்கு வந்து நின்று, பஸ் ஏறிச் செல்கின்றனர்.
அறிவுரையை மீறி...
மாணவியர் வசதிக்காக டவுன் பஸ்கள், 'நேரு வீதியில் இருந்து குமரன் நினைவிடம் வளைவு வந்து, ரவுண்டானா சுற்றி, சாலையின் இடது புறமாக ஸ்டாப்பில் நின்று, மாணவியரை பஸ் ஏற்றிச் செல்ல வேண்டும்' என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்நடைமுறையை ஓரிரு பஸ் டிரைவர், நடத்துனர் மட்டுமே பின்பற்றுகின்றனர்.
பெரும்பாலான பஸ்கள், ரவுண்டானா சுற்றாமல், ஓரமாக ஸ்டாப்பிலும் நிற்காமல், பஸ் ஸ்டாப் எதிரில், நிழற்குடையில் இருந்து ஐந்தடி தள்ளி நடுரோட்டில் நிறுத்தப்படுகிறது. மாணவியர் ஓடிச்சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. இவ்வேளையில் வேகமாக சாலை இடதுபுறமாக கடந்து செல்லும் வாகனங்களால், விபத்து அபாயம் உள்ளது; போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
ஆய்வு நடத்த வேண்டும்
''வேகமாக வரும் வாகனங்கள் மாணவியர் மீது மோதி விடும் நிலை உள்ளது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் பஸ் ஏற வேண்டியுள்ளது. பஸ்கள் செல்லும் பாதையை அறிவித்த போலீசார், டவுன் பஸ்கள் 'பீக் ஹவர்' நேரத்தில் சரியாக ஸ்டாப்பில் நின்று செல்கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
மாணவியர் மிகவும் சிரமப்படுவதால், நிகழ்விடத்தில் போக்குவரத்து உதவி கமிஷனர் ஆய்வு நடத்த வேண்டும்'' என்கின்றனர், பெற்றோர்.