ADDED : ஜூலை 10, 2024 12:11 AM
திருப்பூர்;திருப்பூரில், வீடியோ விவகாரத்தில் வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில், மேலும், இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்தவர் அன்பு, 23. இவர் கணக்கம்பாளையத்தில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த, 2ம் தேதி இரவு காந்திநகர், ஏ.வி.பி., லே அவுட் பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சடலத்தை கைப்பற்றி அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபர், சிறுமி, இளம்பெண்கள் உள்ளிட்ட பலரிடம் நன்றாக பேசி பழகி, அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக வீடியோக்களை எடுத்து இருந்தார்.வீடியோ, போட்டோ விவகாரம் குறித்து போலீசாருக்கு தெரியாமல் இருக்க, அன்புவிடம் நண்பர்கள் சிலர், பத்து லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர்.
இதுதொடர்பாக, நண்பர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அன்பு கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக, நிருபர்கள் இருவர், இலங்கை தமிழர் உட்பட, 11 பேரை போலீசார் கைது செய்தனர். கொலையில், ஐந்துக்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வந்த நிலையில், கொலையில் தொடர்புடைய திலோத்தமன், 24 மற்றும் ஹரீஷ், 24 ஆகிய இருவரை கைது செய்தனர்.