ADDED : ஜூன் 18, 2024 12:27 AM

திருப்பூர்:திருப்பூர் காமராஜர் ரோட்டில் மத்திய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், இரண்டு அடுக்கு வணிக வளாகம் உள்ளது. தரை தளத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. முதல் தளத்தில் பயணிகள் தங்குவதற்கான ஓய்வறை கட்டப்பட்டு, இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அறைக்காக வாங்கப்பட்ட கட்டில், மெத்தை, தலையணைகள் உள்ளே இருந்தது.
நேற்று மதியம், ஓய்வு அறைக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த பயணிகள் திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் தீ அங்கிருந்த மெத்தை மீது பிடித்து எரிய ஆரம்பித்தது. தொடர்ந்து தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில், ஒன்பது மெத்தைகள் எரிந்தன. தீ விபத்துக்கு காரணம் போதை ஆசாமிகள் யாராவது இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.