/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டம்: செயல்படுத்துவதில் குழப்பம் வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டம்: செயல்படுத்துவதில் குழப்பம்
வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டம்: செயல்படுத்துவதில் குழப்பம்
வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டம்: செயல்படுத்துவதில் குழப்பம்
வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டம்: செயல்படுத்துவதில் குழப்பம்
ADDED : ஜூன் 18, 2024 10:56 PM
உடுமலை:நீர் நிலைகளை துார்வாரும் வகையிலும், விவசாயிகள் விளை நிலங்களை வளமாக்கும் வகையிலும், வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்துவதில் குழப்பம் நீடித்து வருகிறது.
ஆண்டு தோறும் பருவ மழைக்கு முன், குளம், குட்டைகள், அணைகளை துார்வாரும் வகையிலும், விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும், விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டம், கடந்த, 2017 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழும், துார்வாரும் பணிகள் நடந்தன.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, நன்செய் நிலத்திற்கு, 75 கன மீட்டரும், புன்செய் நிலத்திற்கு, 90 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.
விவசாயிகள் நேரடியாக தாலுகா அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, குளம், குட்டைகள் மற்றும் திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுத்து வந்தனர்.
கடந்தாண்டு, வேளாண் துறை வாயிலாக, கனிம வளத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து, விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், நடப்பாண்டு, தமிழக அரசு, ஆன்லைன் வாயிலாக, விவசாயிகள் விண்ணப்பித்து, அருகிலுள்ள அணைகள், குளம், குட்டைகள் மற்றும் அணைகளில் மண் எடுத்துக்கொள்ளலாம், என எளிமைப்படுத்தப்படுகிறது.
தாலுகா வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நீர் நிலைகள், விவசாயிகள் விண்ணப்பிக்கும் வகையில், இணைய தள முகவரி என எந்த விதமான தொடர் நடவடிக்கைகளும், அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ளவில்லை.
இதனால், இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து, அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
நீர் நிலைகளை துார்வாரி ஆழப்படுத்தும் வகையில், விவசாயிகள், பானை தொழிலாளர்கள், தாலுாகா அளவிலேயே, அனுமதி பெற்று, மண் எடுத்துக்கொள்ளலாம், என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், முறையான அரசு ஆணை, எந்த இணைய தளம் வாயிலாக விண்ணப்பிப்பது போன்ற எந்த விதமான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
அதே போல், மாவட்ட அளவில், துார்வார வேண்டிய நீர் நிலைகள் குறித்தும், எடுக்க வேண்டிய மண் அளவு குறித்தும், மாவட்ட அரசிதழ் வெளியிடப்படும். இப்பணிகளும் மேற்கொள்ளாததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.