/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாம்பார் வெள்ளரி; விலை கிடுகிடு! முகூர்த்த சீசனில் ஜோர் சாம்பார் வெள்ளரி; விலை கிடுகிடு! முகூர்த்த சீசனில் ஜோர்
சாம்பார் வெள்ளரி; விலை கிடுகிடு! முகூர்த்த சீசனில் ஜோர்
சாம்பார் வெள்ளரி; விலை கிடுகிடு! முகூர்த்த சீசனில் ஜோர்
சாம்பார் வெள்ளரி; விலை கிடுகிடு! முகூர்த்த சீசனில் ஜோர்
ADDED : ஜூன் 03, 2024 12:13 AM

உடுமலை:சாம்பார் வெள்ளரிக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், விளைச்சல் குறைவாக உள்ளதால், விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு சீசனுக்கேற்ற காய்கறி சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கேரளாவில் அதிகமாக விற்பனையாகும், பொரியல்தட்டை மற்றும் சாம்பார் வெள்ளரி சாகுபடிக்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சொட்டு நீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்வதால், தண்ணீர் தேவை குறைவாகவே உள்ளது.
தற்போது, மடத்துக்குளம் வட்டாரம் வேடபட்டி உள்ளிட்ட இடங்களில், சாம்பார்வெள்ளரி சாகுபடியில், அறுவடை துவங்கியுள்ளது. நேரடியாக விளைநிலங்களிலும், பசுமைக்குடில் அமைத்தும் இச்சாகுபடியை மேற்கொள்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: சாம்பார் வெள்ளரிக்கு கேரளாவில் அதிக தேவையுள்ளது. எனவே வியாபாரிகள் நேரடியாக வந்து, கொள்முதல் செய்து செல்கின்றனர். அதன் அடிப்படையில், முகூர்த்த சீசனை இலக்காக வைத்து நடவு செய்கிறோம்.
110 நாட்கள் வயதுடைய இச்சாகுபடியில், 60 நாளில், காய்கள் பிடிக்க துவங்கும். குறிப்பிட்ட இடைவெளியில், காய்களை பறிக்கலாம். சீதோஷ்ண நிலை ஒத்துப்போனால், ஏக்கருக்கு, 12 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.
வடகிழக்கு பருவமழை பெய்யாமல், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், பெரும்பாலானவர்கள் சாகுபடியை கைவிட்டனர். இதனால், வைகாசி முகூர்த்த சீசன் துவங்கி, தேவை அதிகரித்துள்ளது.
தேவைக்கேற்ப விளைச்சல் இல்லாததால், தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பு, கிலோ, 10 ரூபாயாக இருந்த விலை, தற்போது கிலோ 25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.