Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காட்டுப்பன்றிகளால் சேதம் நிவாரணம் இழுபறி கூட்டம் நடத்த கோரிக்கை

காட்டுப்பன்றிகளால் சேதம் நிவாரணம் இழுபறி கூட்டம் நடத்த கோரிக்கை

காட்டுப்பன்றிகளால் சேதம் நிவாரணம் இழுபறி கூட்டம் நடத்த கோரிக்கை

காட்டுப்பன்றிகளால் சேதம் நிவாரணம் இழுபறி கூட்டம் நடத்த கோரிக்கை

ADDED : மார் 13, 2025 11:28 PM


Google News
உடுமலை; விளைநிலங்களில், வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு நிவாரணம் நிர்ணயிக்கும் வகையில், கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக எல்லையில், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அமைந்துள்ளன.

எல்லையிலுள்ள, விளைநிலங்களில், நிலக்கடலை, தென்னை, மா, மொச்சை உட்பட பல்வேறு விவசாய சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வனத்திலிருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள், யானை, மான்கள் கூட்டம், விளைநிலங்களில், தொடர் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. வனத்திலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள, குடிமங்கலம் வட்டாரத்திலும் காட்டுப்பன்றிகளால், சாகுபடிகள் பாதிக்கிறது.

மக்காச்சோளம், நிலக்கடலை, மொச்சை பயிர்களில், செடிகளை முழுவதுமாக அழித்து, பொருளாதார சேதம் ஏற்படுத்தி வருகின்றன.

வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் கூட்டம், எல்லையிலுள்ள, மழை நீர் ஓடைகளில் பதுங்கி, இரவு நேரங்களில், விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதால், அவற்றை கட்டுப்படுத்த முடியாமல், விவசாயிகள் திணறுகின்றனர்.

பல்வேறு பகுதிகளில், காட்டுப்பன்றிகள் தொல்லையால், விவசாயிகள் சாகுபடியை கைவிடும் நிலைக்கு கூட தள்ளப்பட்டுள்ளனர்.

'காட்டுப்பன்றிகளின் இனப்பெருக்கம் காரணமாக, அவை, கிராமங்கள் வரை வரத்துவங்கியுள்ளன. பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை மீண்டும் வனப்பகுதி விரட்ட வேண்டும்; அவற்றை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்', என வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் போராட்டமும் நடந்தது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வனவிலங்குகளால் சாகுபடி பாதிக்கும் போது, நிவாரணம் வழங்க வனத்துறையினர் காலதாமதம் செய்கின்றனர். மேலும், பாதிப்புக்கும், வனத்துறை வழங்கும் நிவாரணத்துக்கும் சம்மந்தமே இல்லை.

எனவே, கிராம விவசாயிகளை உள்ளடக்கிய வன உரிமை குழு கூட்டங்களை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும். விவசாயிகளிடம் கருத்து கேட்டு, அதற்கேற்ப நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us