ADDED : ஜூன் 18, 2024 12:26 AM

பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
இவற்றில், பெரும்பாலான கோவில்கள் பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இக்கோவில்கள், நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளன.
சமீபகாலமாக, குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளும் பக்தர்கள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன், பல்வேறு கோவில்களிலும் திருப்பணி நடந்து வருகிறது.
என்.ஜி.ஆர்., ரோடு, மாகாளியம்மன் கோவில், பொங்காளி அம்மன், அருளானந்த ஈஸ்வரர், அங்காளம்மன், விநாயகர் - பாலதண்டபாணி மற்றும் கடைவீதி ஐயப்பன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் திருப்பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
ஒரே காலகட்டத்தில் பெரும்பாலான கோவில்களிலும் திருப்பணி நடந்து வரும் சூழலில், விரைவில் கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான கோவில்களும் ஒரே காலகட்டத்தில் திருப்பணி துவங்கியுள்ளதால், நிதி ஆதாரம் திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பெரும்பாலான கோவில்கள், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளதால், இம்முறை கும்பாபிஷேகம் நடத்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு குலத்தை சேர்ந்தவர்களும், பக்தர்களும் களம் இறங்கியுள்ளனர்.
இதனால், பல்லடம் பகுதி, விரைவில் திருவிழாக்கோலம் காணப்போகிறது.