/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கேள்விக்குறியாகும் நீர்நிலை பாதுகாப்பு! கேள்விக்குறியாகும் நீர்நிலை பாதுகாப்பு!
கேள்விக்குறியாகும் நீர்நிலை பாதுகாப்பு!
கேள்விக்குறியாகும் நீர்நிலை பாதுகாப்பு!
கேள்விக்குறியாகும் நீர்நிலை பாதுகாப்பு!
ADDED : ஜூலை 21, 2024 12:35 AM

திருப்பூர்;புது வெள்ளம் பாயும் நொய்யல் ஆற்றில் கழிவுகள் சங்கமித்தும், ஆகாய தாமரை சூழ்ந்தும் இருப்பதால், நீர்நிலை பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி, வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் பாயும் சிறு, சிறு ஓடைகள் நொய்யல் ஆற்றில் சங்கமிக்கின்றன. கோவை, சூலுார், பல்லடம், மங்கலம், திருப்பூர், ஈரோடு, ஒரத்துப்பாளையம் அணை என பயணிக்கும் நொய்யல் ஆறு, கரூர் அருகே நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியில் கலக்கிறது.
பழமையும், பெருமையும் நிறைந்த நொய்யல் நீர்வழித்தடத்தின் பல இடங்கள், தன் அடையாளத்தை இழந்து வருகிறது. குறிப்பாக, திருப்பூர் நகரில், நீர்நிலை பாதுகாப்பு என்பது, முற்றிலும் கேள்விக்குறியாகவே உள்ளது. முதலிபாளையம் பகுதியில் பிரியும் நொய்யல் நதி நீர், மாணிக்காபுரம் குளத்தில் சங்கமிக்கிறது. அதே போன்று மற்றொரு கிளை, அமுக்கியம் பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் சங்கமிக்கின்றன. சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் பருவ மழையால், நொய்யலில் மழைநீர் ஆர்ப்பரித்து வழிந்தோடி வருகிறது. முதலிபாளையம், அமுக்கியம் உள்ளிட்ட இடங்களில், நீர்வழித்தடத்தில் ஆகாய தாமரை அடர்ந்து வளர்ந்துள்ளன. நீர் வழித்தடத்தின் ஓரத்தில் உள்ள குடியிருப்புவாசிகள், பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை நீர்வழித்தடங்களில் வீசியெறிகின்றனர்.
இதனால், நீர்வழித் தடத்தில் பெருக்கெடுக்கும் நீர் அடைபட்டு, குடியிருப்புகளுக்குள் புகும் வாய்ப்பு இருப்பதால், நீர்வளத்துறையினர் அவற்றை அகற்றியுள்ளனர்; இருப்பினும், மீண்டும், மீண்டும் நீர் வழித்தடத்தில் குடியிருப்புவாசிகள் குப்பை, கழிவுகளை வீசியெறியும் வாய்ப்பு இருப்பதால், நீர்வழித்தடம் அடைபடுவதுடன், நீர் மாசு ஏற்படும்.
நீர் நிலைகளை பாதுகாப்பதுடன், துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், திருப்பூரில் உள்ள நீர்நிலை பாதுகாப்பு சார்ந்த எவ்வித பெரிய பணிகளும் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நீர்நிலைகள் நிறைந்த திருப்பூரில், அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.