/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாட்டுப்பாடி கவனத்தை ஈர்த்த மாற்றுத்திறனாளிகள் பாட்டுப்பாடி கவனத்தை ஈர்த்த மாற்றுத்திறனாளிகள்
பாட்டுப்பாடி கவனத்தை ஈர்த்த மாற்றுத்திறனாளிகள்
பாட்டுப்பாடி கவனத்தை ஈர்த்த மாற்றுத்திறனாளிகள்
பாட்டுப்பாடி கவனத்தை ஈர்த்த மாற்றுத்திறனாளிகள்
ADDED : ஜூலை 17, 2024 01:20 AM

திருப்பூர்;உதவித்தொகையை விரைந்து வழங்கக் கோரி, திருப்பூர் பகுதி மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் சஞ்சீவ் தலைமை வகித்தார்.
திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ், நகர தலைவர் பொம்முதுரை உள்பட மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாதாந்திர உதவித்தொகையை விரைந்து விடுவிக்க வேண்டும், நுாறு நாள் வேலையில் மாற்றுத் திறனாளிகளை புறக்கணிக்க கூடாது, ஏ.ஏ.ஒய்., ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என, கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் இருந்து ஊர்வலமாக வந்து, தரையில் அமர்ந்த மாற்றுத்திறனாளிகள், தர்ணாவில் ஈடுபட்டனர். 'எங்களை தெரியலையா… எங்கள் நிலைமை புரியலையா,' என தங்கள் மன வேதனையை பாடலாக பாடி, கவனத்தை ஈர்த்தனர்.
மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ் கூறியதாவது:
திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓராண்டுக்கு மேலாகியும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படவில்லை. தேசிய வேலை உறுதி திட்டத்திலும், மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், அலுவலர் சிலர், மாற்றுத்திறனாளிகளை இழிவாக நடத்துகின்றனர்; அத்தகைய அலட்சிய போக்கை கைவிட வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளின் ரேஷன் கார்டுகளையும், ஏ.ஏ.ஒய்., கார்டாக மாற்றிக்கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து, உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும். இல்லையென்றால், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ராம்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்கபிரதிநிதி களை அழைத்து பேசினார்; மனுவை பெற்றுக் கொண்டு, அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக தெரிவித்ததால், தர்ணாவை கைவிட்டனர்.