ADDED : ஜூன் 08, 2024 12:49 AM
திருப்பூர்;நாட்டின், 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர் திருப்பூர் பனியன் தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
பனியன் தொழிற்சாலைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை, பீஹார், ஒடிசா, குஜராத், உ.பி., ம.பி., உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் நிவர்த்தி செய்து வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, பனியன் தொழிற்சாலைகளின், ஆறு லட்சம் தொழிலாளர்களில், இரண்டு லட்சம் பேர் வடமாநில தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த மாநிலத்தில் லோக்சபா தேர்தல் என்றதும், வடமாநில தொழிலாளர் மார்ச் மாத இறுதியில், சொந்த ஊர் புறப்பட தயாராகினர். குறிப்பாக, பீஹார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், ஏழு கட்டமாகவும் தேர்தல் நடந்தது. இதன்காரணமாக, மார்ச் மூன்றாவது வாரத்தில் சென்ற தொழிலாளர், 50 நாட்களாக, சொந்த ஊரிலேயே தங்கிவிட்டனர்.
திடீரென தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால், பனியன் தொழிலாளர் பற்றாக்குறை ஏற் பட்டது. ஆர்டர் வரத்து துவங்கியுள்ள நிலையில், தொழிலாளர் தேவையை சமாளிக்க, பல்வேறு முயற்சியை மேற்கொண்டனர். தற்போது, தேர்தல் முடிந்துள்ள நிலையில், வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக, வடமாநிலங்கள் வழியாக வந்து செல்லும் ரயில்களில், தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்தபடி உள்ளனர்.
கோடை கால ஆர்டர்கள் முடிந்து, குளிர்கால ஆர்டர் வரத்து துவங்கியுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பின், ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும் பணிகள் சற்று வேகமெடுத்துள்ளன.