Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இயற்கை வளங்களை

இயற்கை வளங்களை

இயற்கை வளங்களை

இயற்கை வளங்களை

ADDED : ஜூலை 28, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
இந்த பூமி, மனிதர்களுக்கானது மட்டுமானது அல்ல; அனைத்து ஜீவ ராசிகளுக்குமானது என்பது தான் இயற்கையின் நியதி. ஆனால் வளர்ச்சி, வசதி என்ற பெயரில், மலைகள், மரங்கள், காடுகள், நீர் நிலைகள் என, இயற்கையின் கொடைகள் மெல்ல, மெல்ல சுரண்டப்படுகின்றன; சூறையாடப்படுகின்றன.

'இயற்கையின் இயல்பு இம்சிக்கப்படுவதால் தான் பெரு மழை, வறட்சி, நிலநடுக்கம், கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற வரலாறு காணாத பேரிடர்கள் அவ்வப்போது வந்து போகின்றன' என்கின்றனர் விஞ்ஞானிகள். 'இயற்கை, இயல்பு கெடாமல் பாதுகாக்கப்படவேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் தான், ஆண்டுதோறும், ஜூலை, 28ல், 'இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது. 'சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கு வழிவகை ஏற்படுத்துதல்' என்பதே இந்தாண்டின் கருப்பொருள்.சர்வதேச தொழில் நகரான திருப்பூரில், தொழில் சார்ந்த பார்வையை கடந்து, இயற்கையின் மீதான கரிசனையும், இயற்கை வளங்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்க துவங்கியிருக்கிறது. நஞ்சராயன், ஆண்டிப்பாளையம் குளங்கள், திருமூர்த்தி அணை, அமராவதி அணை, நொய்யல் ஆறு, நல்லாறு, கவுசிகா நதி போன்ற இயற்கை வளங்கள் ஆறுதல் அளிக்கின்றன. 'அதன் இயல்பு கெடாமல் மீட்டெடுத்து, அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது நம் கடமை' என்கின்றனர் இயற்கை விரும்பிகள்.

- இன்று இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினம்

-------------------------------------------

குளம் பாதுகாக்கப்படும்...

திருப்பூர் தொழில் நகரமாக இருப்பினும், நீர்நிலை சார்ந்த இயற்கை வளங்கள் அதிகளவில் உள்ளன. அவற்றை மீட்டெடுக்க வேண்டும். ஆண்டிப்பாளையம் குளத்தை, சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது; படகு சவாரி விடப்பட இருக்கிறது. இதன் வாயிலாக, குளம் பாதுகாக்கப்படும். இங்கு வந்து செல்லும் மக்கள், குளம், குட்டைகளின் அவசியத்தை உணர்ந்துக் கொள்ள முடியும். திருப்பூரில் இருந்து வெறும், 10 கி.மீ., தொலைவில் உள்ள இக்குளம், நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்காற்றுகிறது; இது, திருப்பூரின் எதிர்கால வளர்ச்சிக்கு பேருதவி புரியும்.

- அரவிந்த்குமார்

மாவட்ட சுற்றுலா அலுவலர்

-------------------------------------------

சிதைக்க வேண்டாம்...

கடந்த, 40, 50 ஆண்டுகளுக்கு முன் 'இயற்கையை காப்போம்' என்ற கூக்குரல் எங்கும் எழவில்லை. ஆனால் இன்று, அந்த கூக்குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதற்கு காரணம், 'இயற்கைக்கு ஆபத்து நேரிடுகிறது' என்பது தான். திருப்பூரில் நீர்நிலை, புல்வெளி காடுகள் உள்ளன. அவை பறவைகள், சிறு பூச்சி, பாலுாட்டிகளின் வாழ்விடமாக மாறி, பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவி புரிகின்றன. இயற்கையை பாதுகாப்பதில் தன்னார்வ அமைப்பினர் ஒன்றிணைய வேண்டும். மாணவ சமுதாயத்தினர் மத்தியில் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, வரும் காலத்தில் ஆட்சி, அதிகாரத்தில் அவர்கள் அமரும் போது, இயற்கைக்கு சிதைவு ஏற்படாமல் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவர்.

- ரவீந்திரன்

திருப்பூர் இயற்கை கழக தலைவர்

-------------------------------------------

உறுதியேற்க வேண்டும்...

திருப்பூர் மாவட்டத்தில் ஆறு, ஓடை, நீர்நிலைகளில் சாயக்கழிவுநீர் கலப்பதை தவிர்க்க, பூஜ்யம் நிலை சுத்திகரிப்பு ஆலை நிறுவி, தினமும், 13 கோடி லிட்., சாயக் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றி வருகிறோம். இதன் வாயிலாக நிலத்தடி நீர் வளம் பெருகுகிறது. பெரு நிறுவனங்கள், காற்றாலை மற்றும் சோலார் மின்னாற்றல் வாயிலாக, மரபு சாரா மின் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றன. பசுமை போர்வையை உருவாக்கி, மழை வளம் பெருக்கும் நோக்கில், 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பு சார்பில், கடந்த, 10 ஆண்டுகளில், 19.28 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன; அதில், 90 சதவீதம் மரங்கள் வளர்ந்துள்ளன.அடுத்த சந்ததிக்கு நம்மால் இயன்றவரை இயற்கையை காப்பாற்றி விட்டுச் செல்வோம் என ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

- குமார் துரைசாமி

இணை செயலாளர்திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us