Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ம.பி., முதல்வர் கோவை வருகை தொழில் துறையினர் ஆலோசனை

ம.பி., முதல்வர் கோவை வருகை தொழில் துறையினர் ஆலோசனை

ம.பி., முதல்வர் கோவை வருகை தொழில் துறையினர் ஆலோசனை

ம.பி., முதல்வர் கோவை வருகை தொழில் துறையினர் ஆலோசனை

ADDED : ஜூலை 18, 2024 09:22 PM


Google News
பல்லடம்:ம.பி., முதல்வர், கோவை வருகையை முன்னிட்டு, அம்மாநிலத்தில் தொழில் தொடங்குவது குறித்து, ஜவுளி தொழில் துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

ஜவுளி தொழில் சார்ந்த முன்னோடி நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, தொழில் துறையை ஈர்க்கும் நோக்கில், ம.பி., முதல்வர் மோகன் யாதவ், வரும், 25ம் தேதி கோவைக்கு வருகிறார். கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள மெரிடியன் ஹோட்டலில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஜவுளி துறையினர் கூறியதாவது:

தமிழகத்தில், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில், ஜவுளி தொழில் பிரதானமாக உள்ளது. இந்தியாவில், மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகத்தில் தான் ஜவுளி தொழில் பரவலாக நடக்கிறது. குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் தொழில் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதால், அந்த மாநிலங்களில் தொழில்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன.

ஆனால், தமிழகத்தில் சிறு குறு தொழில்களை அரசு கண்டுகொள்ளாததால், தொழில்கள் நசிந்து வருகின்றன. பல ஆண்டுகளாக ஜவுளி தொழில் செய்து வரும் பலர், முதலீட்டுக்காக, தங்களது சொத்துக்களை அடமானம் வைத்து கடன் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், மின் கட்டண உயர்வால் பலரும் தொழிலை விட்டு செல்லும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தலுக்கு முன், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிய தமிழக அரசு, இடைத்தேர்தல் முடிந்ததும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே, தொழில் நெருக்கடி காரணமாக, அண்டை மாநிலத்துக்கு சென்று விடலாம் என்ற மனநிலையில் பலரும் உள்ளனர்.

இதற்கிடையே, தொழில் துறையினருக்கு அழைப்புவிடுக்கும் விதமாக, ம.பி., முதல்வர் கோவைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில், 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், ஜவுளி தொழில் சார்ந்த இயந்திர தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளால், தொழில் துறையினர் அங்கு ஈர்க்கப்பட்டு வருகின்றனர். எனவே, மத்திய பிரதேச முதல்வரின் கோவை வருகை, ஜவுளி தொழில் துறையினரால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us