/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இயற்கையோடு இணைந்த வாழ்க்கை சிறக்கும்! பசுமை கருத்தரங்கில் அறிவுறுத்தல் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை சிறக்கும்! பசுமை கருத்தரங்கில் அறிவுறுத்தல்
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை சிறக்கும்! பசுமை கருத்தரங்கில் அறிவுறுத்தல்
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை சிறக்கும்! பசுமை கருத்தரங்கில் அறிவுறுத்தல்
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை சிறக்கும்! பசுமை கருத்தரங்கில் அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 17, 2024 12:08 AM

திருப்பூர்;அவிநாசி அருகே திருமண விழாவில் நடைபெற்ற பசுமை கருத்தரங்கில், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் 'கிளாசிக் போலோ' சிவராம் மகள் அக் ஷயா மற்றும் அவிநாசி சுபம் டெக்ஸ் ஈஸ்வரன் மகன் தினேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா, அவிநாசி செந்துார் மஹாலில் நடந்தது. விழாவில், பசுமை கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் தலைமை வகித்து பேசுகையில், ''பசுமை திருமணம் என்பது நிலைத் தன்மையானது. வளங்களை குறைப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது, உள்ளிட்ட விழிப்புணர்வுகள் இதன் மூலம் ஏற்படுகின்றன. பழங்குடியின மக்கள், மணமக்களை வாழ்த்தும் போது, இருவாச்சி பறவையைப் போல் வாழ வேண்டும் என்பார்கள்.
இருவாச்சி பறவைகள் மிகவும் பொறுப்புடன் தங்கள் குடும்பத்தை வழிநடத்தும் என்பதே அதற்கு காரணம். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
பொதிகை சோலை கூட்டுப் பண்ணைய அமைப்பின் தலைவர் பாமயன்: இயற்கை வேளாண்மை குறித்த பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை மக்கள் கொண்டுள்ளனர். இயற்கை வேளாண்மை செய்ததால் தான் இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது என சிலர் பேச கேட்டிருக்கலாம்.
ஆனால் கியூபா நாட்டில் இயற்கை வேளாண்மை வெற்றி கரமாக நடந்து வருகிறது என்பதை பற்றி யாரும் பேசுவதில்லை. இயற்கை வேளாண்மையை அதற்குரிய நடைமுறைக்கு உட்பட்டு செயல்படுத்தும் போது, நிச்சயம் வெற்றி பெற முடியும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் செந்துார் பாரி: உலக அளவில் மிக முக்கிய பிரச்னையாக மாறி இருப்பது தண்ணீர் பற்றாக்குறை. நம் நாட்டிலும் அந்த பிரச்னை உள்ளது. தமிழகத்திலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் மழைப்பொழிவு போதியளவு உள்ளது.
ஆனால், அதற்கான மழைநீர் சேமிப்பு திட்டங்கள் இல்லை. நீர்நிலை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நீர் சேமிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் அது சட்டமாக உருவெடுக்கும்.
ஓசை அமைப்பு நிறுவனர் காளிதாசன்: 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் உயிரினங்கள் தோன்றி விட்டன. 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூச்சி இனங்கள் வந்து விட்டன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஊர்வன வந்துவிட்டன ஆனால், 2-3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மனித இனம் தோன்றியது.
மனிதர்கள் இல்லாத உலகத்தில் பறவைகள், விலங்கினங்கள் வாழ்ந்து விடும். ஆனால் பறவைகள், விலங்குகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சுந்தரராஜன்: இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் எதிர்கொள்கிற முக்கியமான பிரச்னை காலநிலை மாற்றம் தான். புவி வெப்பம் அதிகரித்து வருகிறது.
வெப்ப அலைகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை இந்த ஆண்டு உணர்ந்தோம். காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற தகவமைப்பை ஏற்படுத்த உலக நாடுகள் தயாராகி வருகின்றன.
அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு கால சூழ்நிலையை நாம் விட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் இது போன்ற பசுமை கருத்தரங்கின் நோக்கம்.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட இயக்குனர் குமார் துரைசாமி: 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பு, 10 ஆண்டுகளில், 21 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 90 சதவீத மரங்களை காப்பாற்றியுள்ளோம்.
இதற்கு அனைத்து தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்பு காரணம். பல்வேறு தடைகளை தாண்டி இந்த வெற்றியை பெற்றுள்ளோம். வளம் குன்றா வளர்ச்சி என்பதை உலக நாடுகள் பேச துவங்கியுள்ளன. ஆனால், 20, 30 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பூரில் உள்ள தொழில்துறையினர் இந்த கோட்பாட்டை கடைபிடித்து வருகின்றனர்.
அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி: சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேடு விளைவிப்பது செல்வந்தர்கள், வசதி படைத்தவர்கள் தான். சாமானிய, சாதாரண மக்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அதனால் பாதிக்கப்படுவது அவர்கள் தான். மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியங்களில் சுற்றுச்சூழல் குறித்து பேசப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்காக தமிழகத்தில் உள்ள ஏராளமான அமைப்புகள் தொடர்ந்து, குரல் கொடுத்து வருகின்றன. இன்றைக்குள்ள மிகப்பெரிய ஆபத்து காலநிலை மாற்றம் தான்.
மாவட்டம் தோறும் இதுபோன்ற சிறு, சிறு அமைப்புகள் உருவாகி, மரம் நடுவது, பாலிதீன் தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.