/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குமரிக்கல்பாளையம் விவகாரம்: அரசு தெளிவுபடுத்துமா? குமரிக்கல்பாளையம் விவகாரம்: அரசு தெளிவுபடுத்துமா?
குமரிக்கல்பாளையம் விவகாரம்: அரசு தெளிவுபடுத்துமா?
குமரிக்கல்பாளையம் விவகாரம்: அரசு தெளிவுபடுத்துமா?
குமரிக்கல்பாளையம் விவகாரம்: அரசு தெளிவுபடுத்துமா?
ADDED : ஜூன் 20, 2024 04:50 AM

திருப்பூர், : குமரிக்கல்பாளையம் பகுதியை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் விவகாரத்தில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஊத்துக்குளி ஒன்றியம், காவுத்தம்பாளையம் ஊராட்சியில், குமரிக்கல்பாளையம் உள்ளது. இங்கு 150 ஏக்கர் பரப்பளவில், துணை மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் முடிவெடுத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள், 'துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, அப்பகுதியில் உள்ள பழமையான தொல்லியல் எச்சங்களை பாதுகாக்க வேண்டும்' என வலியுறுத்தி 400 நாட்களுக்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மின்வாரியம் விளக்கம்
காவுத்தம்பாளையம் ஊராட்சி தலைவருக்கு, மின் வாரிய கோவை பொது கட்டுமான வட்ட மேற்பார்வை பொறியாளர் அனுப்பிருந்த கடிதத்தில், 'துணை மின் நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்ட இடத்தில், தொல்லியல் எச்சங்கள், கல்வெட்டுகள் மற்றும் பானை ஓடுகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என, வருவாய்த் துறையினரின் ஆய்வில் தெரியவந்தது. அமைக்கப்படவுள்ள துணை மின் நிலையத்துக்கு கிழக்கே, 221 மீ., தெற்கே, 208 மீ,, தொலைவில்தான் இவை அமைந்துள்ளன. கலெக்டர் உத்தரவுக்கிணங்க, நிலமெடுப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மின் பரிமாற்ற இழப்பை குறைத்து, சீரான மின்னழுத்தம் வாயிலாக தொடர்ந்து மின்சாரம் வினியோகிக்க தகுந்த இடமாக காவுத்தம்பாளையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,' என கூறப்பட்டிருந்தது.
தெளிவு வேண்டும்
காவுத்தம்பாளையம் ஊராட்சி தலைவர் பவித்ரா கூறுகையில், ''குமரிக்கல்பாளையம் பகுதியை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தி, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பியுள்ளோம். துணை மின்நிலையம் அமைப்பது தொடர்பான மின் வாரியத்தின் கடிதத்துக்கு பின், வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், தங்கள் நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும்'' என்றார்.
---
குமரிக்கல்பாளையத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்.