UPDATED : ஜூலை 07, 2024 04:44 PM
ADDED : ஜூலை 06, 2024 08:52 PM

துள்ளிக் குதித்து விளையாடும் பால்ய பருவத்தில், பொழுது போக்காய் கற்றுக் கொண்ட கராத்தே பயிற்சி, இன்று மலேஷியாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செய்திருக்கிறது.
இந்த சாதனைக்கு சொந்தக்காரர், திருப்பூர் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் - நளினி தம்பதியின் மகள் நட்சத்திரா. தற்போது, ஊட்டியில் உள்ள கான்வென்டில், 7 ம் வகுப்பு படிக்கும் நட்சத்திரா, மலேஷியாவில் நடந்த கராத்தே போட்டியில், 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று, இரண்டாமிடம் பெற்றிருக்கிறார்.
'சிறு வயதில் இந்த அசாத்திய திறமை எப்படி வந்தது?'
''எனக்கு சின்ன வயசில இருந்தே கராத்தே படிக்கணும்னு ஆசை. மூனாம் வகுப்புல இருந்தே கராத்தே பயிற்சி எடுத்துட்டு வர்றேன்; ஆரஞ்சு பெல்ட் வரைக்கும் வாங்கியிருக்கேன். விடாம பயிற்சி செய்வேன். மாவட்ட, தேசிய அளவில் நடந்த பல போட்டிகள்ல பங்கேற்று ஜெயிச்சிருக்கேன். முதன் முறையாக, வெளிநாட்டில் நடந்த ஒரு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருப்பது, மகிழ்ச்சியளிக்கிறது. கராத்தே விளையாட்டை முழுமையா கத்துக்கிட்டு, பெரிய பெரிய போட்டிகள்ல கலந்துக்கணும்னு தான் ஆசை. கராத்தே படிக்கிறதா, மனசுல தைரியம் வருது; தன்னம்பிக்கை வருது; கவனச்சிதறல் ஏற்படறது இல்ல; இதனால, பாடங்களையும் நல்லபடியா படிக்க முடியுது'' என கண்களில் நம்பிக்கை ஒளிர கூறினார் நட்சத்திரா.
அவரது பயிற்சியாளர் நாகேந்திரன் கூறுகையில்,''கராத்தே பயிற்சி பெறும் பலர், வீடுகளில் சுய பயிற்சி செய்ய தயக்கம் காண்பிப்பர். ஆனால், நட்சத்திரா, அதிகளவில் சுய பயிற்சியில் ஈடுபடுவார்; அவரது விடா பயிற்சியும், முயற்சியும் தான், அவரை வெற்றிக்கு அழைத்து சென்றிருக்கிறது,'' என்றார்.