/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பல்லடம் போக்குவரத்து நெரிசலுக்கு.. தீர்வு கிடைக்குமா? . புதிய எம்.பி.,யிடம் மக்கள் எதிர்பார்ப்பு பல்லடம் போக்குவரத்து நெரிசலுக்கு.. தீர்வு கிடைக்குமா? . புதிய எம்.பி.,யிடம் மக்கள் எதிர்பார்ப்பு
பல்லடம் போக்குவரத்து நெரிசலுக்கு.. தீர்வு கிடைக்குமா? . புதிய எம்.பி.,யிடம் மக்கள் எதிர்பார்ப்பு
பல்லடம் போக்குவரத்து நெரிசலுக்கு.. தீர்வு கிடைக்குமா? . புதிய எம்.பி.,யிடம் மக்கள் எதிர்பார்ப்பு
பல்லடம் போக்குவரத்து நெரிசலுக்கு.. தீர்வு கிடைக்குமா? . புதிய எம்.பி.,யிடம் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 12, 2024 12:32 AM

பல்லடம்:கோவை தொகுதிக்கு புதிய எம்.பி., வருகையால், பழைய கோரிக்கை நிறைவேறுமா? என, பல்லடம் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டசபை தொகுதியில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை, பழநி, கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் வழித்தடத்தில் பல்லடம் அமைந்துள்ளது.
இதனால், சரக்கு போக்குவரத்து மற்றும் கல்வி, மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்குமான முக்கிய வழியாகவும் உள்ளது. இதனால், பல்லடம் நகரின் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு இணையாக விபத்துக்கள், உயிரிழப்புகள் அதிகரித்ததை கருத்தில் கொண்டு, நீண்ட காலத்துக்கு பின், தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும், பல்லடம் நகரப் பகுதியில் எதிர்பார்த்த அளவு விரிவாக்கம் செய்யப்படவில்லை. விரிவாக்கத்துக்கு தேவையான இடம் இல்லாததும் இதற்கு காரணம். பல்லடம் நகர மக்கள் தொகை ஒருபுறம் அதிகரித்து வர, தொழில், வியாபாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல தேவைகள் காரணமாக, பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன போக்குவரத்தும் பல மடங்கு அதிகரிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் இருந்த போக்குவரத்துக்கும், தற்போதுள்ள வாகன போக்குவரத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளது. பொதுப் போக்குவரத்தை தவிர்த்து, மக்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
இது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும். பல்லடம் நகர பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலை, இப்போதுள்ள வாகன போக்குவரத்திற்கே திணறி வருகிறது. இதில், மேலும் போக்குவரத்து அதிகரிக்கும் பட்சத்தில், பல்லடம் மக்கள் கடும் இன்னல்களை சந்திப்பார்கள். இதன் காரணமாகவே, பல்லடம் நகரப் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த, 2014ல் அ.தி.மு.க.,வும், 2019ல் தி.மு.க.,வும் கோவை லோக்சபா தொகுதியை கைப்பற்றியது. ஆனால், 10 ஆண்டுகளாக பல்லடம் தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. கோவை -- கரூர் பசுமைவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து வந்த முன்னாள் எம்.பி., நடராஜன், பல்லடத்துக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது குறித்து சிந்திக்கவே இல்லை.
இதனால், பல்லடம் மக்கள், போக்குவரத்து நெரிசலால் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது, கோவை தொகுதியின் புதிய எம்.பி.,யாக கணபதி ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்லடம் மக்களின் மேம்பாலம் கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.