ADDED : ஜூன் 05, 2024 11:09 PM

திருப்பூர் : வெள்ளகோவிலில், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய நாயை தீயணைப்பு வீரர்கள் உதவியோடு பொதுமக்கள் மீட்டனர்.
வெள்ளகோவில், தீத்தாம்பாளையம் பகுதியில், உயிருக்கு ஆபத்தான நிலையில், தெரு நாய் ஒன்று, அதன் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் உள்ளதாக அன்பு தேசம் அறக்கட்டளைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
உடனே, அதன் நிர்வாகிகள் அப்பகுதிக்கு சென்று நாயை மீட்க முயன்றனர். ஆனால், மக்களை கண்டதும், நாய் அங்கிருந்த தரை பாலத்துக்கு அடியில் சென்று பதுங்கி கொண்டது. இதனால், வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அறிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பதுங்கியிருந்த நாயை நீண்ட நேர போராட்டத்துக்கு பின் மீட்டு, திருப்பூரில் உள்ள தங்கம் மெமோரியல் டிரஸ்ட்டுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சில நிமிடங்களில், நாயின் கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அந்த வாயில்லா ஜீவன் நன்றாக உள்ளதாக அன்பு தேசம் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.