ADDED : ஜூன் 05, 2024 12:41 AM

திருப்பூர்;ஓட்டு எண்ணிக்கை நடந்த மையம் உள்ளே, வெளியே என, பல்வேறு தடுப்புகளை ஏற்படுத்தி, 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரியில் நேற்று காலை, 8:00 மணிக்கு துவங்கியது. முன்னதாக மையத்துக்குள் போலீசாரின் பலத்த சோதனைக்கு பின், உள்ளே அனுமதிக்கப்பட்டனர். உள்ளே மற்றும் வெளியே பல்வேறு தடுப்பு வளையங்களை பேரிகார்டு மூலம் ஏற்படுத்தினர்.
பாதுகாப்பு பணியில், கமிஷனர் தலைமையில், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என, 900 போலீசார் ஈடுபட்டு இருந்தனர். பல்லடம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வீரபாண்டி, தென்னம்பாளையம் போன்ற பகுதிகள் வழியாக வாகன ஓட்டிகள் சென்றனர்.
இதனால், ஓட்டு எண்ணிக்கை மையம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தது. பல்லடம் ரோடு வெறிச்சோடி காணப்பட்டது.
உணவால் அதிருப்தி
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காலையில், இட்லி போன்றவை வழங்கப்பட்டது. மதியம் போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவு மிக குறைந்த அளவு இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
வழங்கப்பட்ட பார்சல் டப்பாவில், கால் அளவுக்கு வெஜிடபிள் பிரியாணி என்ற பெயரில், தக்காளி சாதம் மற்றும் தயர் சாதமும் மட்டுமே இருந்தது. அதிகாலை முதல் கடுமையான தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு அரைவயிறு கூட உணவு வழங்கப்பட்டதால் போலீசார் வேதனையடைந்தனர்.