நல்லது நடக்கோணும் எம்.பி., அய்யா!
நல்லது நடக்கோணும் எம்.பி., அய்யா!
நல்லது நடக்கோணும் எம்.பி., அய்யா!

சிறப்பு கவனம் தேவை
கொரோனா காலகட்டத்தில், எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்கீடு இல்லை. இதன் காரணமாக, வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க இயலவில்லை. மீண்டும் சுப்பராயனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், இனி வரும் ஐந்தாண்டுகளில், திருப்பூர் பனியன் தொழில் மற்றும் கிராமப்புற மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்ய சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கிராமத்துக்கு முன்னுரிமை
எம்.பி., நிதியில், கிராமப்புற மக்களுக்கு அதிக வளர்ச்சி பணிகளை செய்ய வாய்ப்புள்ளது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் சரியாக பகிர்ந்து, கிராமப்புற மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, நிதி ஒதுக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளில், 25 கோடி ரூபாய்க்கு பணிகளை செய்யும் போது, குடிநீர் உட்பட மக்களின் அடிப்படை தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், 1,400 குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன; விடுபட்ட குளங்களை மீண்டும் இத்திட்டத்தில் சேர்க்க, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நான்காவது குடிநீர் திட்டத்தில், திருப்பூர் கிராமப்புற மக்களுக்கு, தரமான குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டும். குறிப்பாக, மேட்டுப்பாளையம் குடிநீர் அனைவருக்கும் கிடைக்க 'திஷா' கமிட்டி வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லது நடக்குமா?
நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் தான், கடந்த முறை சுப்பராயனுக்கு ஓட்டுப்போட்டோம். எவ்வித அடிப்படை வசதியும் கூட செய்து கொடுக்கவில்லை; இம்முறையாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்; இல்லாதபட்சத்தில், அடுத்தமுறை, ஓட்டளிக்க மாட்டோம்.
தொழில் பாதுகாப்பு
திருப்பூர் பனியன் தொழில் உட்பட பல்வேறு தொழில்களும் நலிவடைந்துள்ளன; இனியாவது, பாராளுமன்றத்தில் பேசி, அனைத்து சிறு தொழில்களை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும். ரோடு மிகவும் மோசமாக இருக்கிறது. தொழிலாளர் நலன் கருதியாவது, தொழில் வளர்ச்சிக்காக குரல்கொடுக்க வேண்டும்.
விலைவாசிக் கட்டுப்பாடு
கவுன்சிலர் முதல் எம்.பி., வரை, எந்த மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்க்க வரக்கூடாது.
காஸ் விலை குறையுமா?
சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருக்கிறது; மக்கள் அதிகம் பயன்படுத்தும் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். மின் கட்டணம், பல மடங்கு அதிகமாகிவிட்டது; தமிழக அரசிடம் பேசி, மின் கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும். டில்லியில் பேசி, திருப்பூர் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முயற்சிக்க வேண்டும்.
வாடகை பெரும் சுமை
திருப்பூரில், வீட்டு வாடகை அதிகமாகிவிட்டது; குடும்பமாக வேலைக்கு சென்றால் மட்டுமே, வாழ்க்கை நடத்த முடியும். தற்போது விலைவாசி ஆளை விழுங்கும் அளவுக்கு இருப்பதால், சிறுசேமிப்பு பைசா கூட இல்லை. நடுத்தர, ஏழை மக்கள் வாழ்க்கை வளம்பெற, வீட்டு வசதி திட்டத்தை கொண்டு வர குரல் கொடுக்க வேண்டும்.
வரிகளை குறைக்க வேண்டும்
தொழில் நசிவு போன்ற காரணங்களால் முடங்கியுள்ள திருப்பூர் மீண்டு எழ வேண்டும். வரியினங்கள் உரிய குழுக்களிடம் ஆலோசனை பெற்றும், மக்களிடம் கருத்து கேட்டும் மாற்றியமைக்க வேண்டும்.அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர்கள் நலன் காக்கும் வகையிலான திட்டங்கள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.