/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு விவசாயிகள் பாதிப்புதக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு விவசாயிகள் பாதிப்பு
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு விவசாயிகள் பாதிப்பு
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு விவசாயிகள் பாதிப்பு
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 27, 2024 02:19 AM

உடுமலை;உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்தாண்டு பருவ மழைகள் குறைந்து வறட்சி ஏற்பட்டதால், சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்ததோடு, வரத்து குறைவால் விலை அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த இரு மாதமாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். தற்போது, இப்பகுதிகளில், தக்காளி அறுவடை துவங்கியுள்ளது.
உடுமலை பகுதிகளில் விளையும் காய்கறிகளை, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம், மறையூர், மூணாறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து, கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த மாதம், உடுமலை சந்தைக்கு, 10 ஆயிரம் தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்து காணப்பட்டது. வரத்து குறைவு காரணமாக, 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, ரூ.700 முதல், 800 வரை விற்று வந்தது.
தற்போது, வரத்து அதிகரிப்பு காரணமாக, தினமும், 30 ஆயிரம் முதல், 50 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து காணப்படுகிறது. வரத்து அதிகரிப்பு காரணமாக, தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
நேற்று, ஒரு பெட்டி, ரூ.350 முதல், 450 வரை மட்டுமே விற்றது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெளி மார்க்கெட்டில், கிலோ, ரூ.25 ஆக குறைந்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
தக்காளி சாகுபடியில், உழவு, நாற்று, இடு பொருட்கள் என, ரூ.50 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கிறது.
சீதோஷ்ண நிலை மாற்றம், மழை காரணமாக. செடி வேருக்கு மருந்து, நன்கு வளர, பூ உதிராமல் தடுக்க மற்றும் ஊசி வண்டு தாக்குதல் பாதிப்பை தடுக்க, என ஏழு முறைக்கு மேல் மருந்து அடிக்க வேண்டியுள்ளது.
மழை காரணமாக, தக்காளி தரம், மகசூல் குறைந்துள்ள நிலையில், விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளதால், பறிப்பு கூலி மற்றும் போக்குவரத்து செலவு கூட கட்டுபடியாகாத சூழல் உள்ளது.
வரத்து அதிகரிப்பை பொருத்து, பல்வேறு மாவட்ட வியாபாரிகள் வருகையை உறுதி செய்ய அதிகாரிகளும், சந்தை நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விலை குறையும் போது, விவசாயிகள் பாதிக்காத வகையில் குளிர் சாதன கிடங்கு மற்றும் தக்காளி சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.