/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சங்கத்தை மூடுவதாக மிரட்டல்; தையல் தொழிலாளர் அதிருப்தி சங்கத்தை மூடுவதாக மிரட்டல்; தையல் தொழிலாளர் அதிருப்தி
சங்கத்தை மூடுவதாக மிரட்டல்; தையல் தொழிலாளர் அதிருப்தி
சங்கத்தை மூடுவதாக மிரட்டல்; தையல் தொழிலாளர் அதிருப்தி
சங்கத்தை மூடுவதாக மிரட்டல்; தையல் தொழிலாளர் அதிருப்தி
ADDED : ஜூலை 08, 2024 11:13 PM
பல்லடம்:பல்லடம், படேல் வீதியில் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் (எண்: 1260) செயல்படுகிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் தையல் தொழிலாளர்கள், துணிகளை பெற்று, அரசு பள்ளிகளுக்கான சீருடைகளை கூலி அடிப்படையில் தைத்து வருகின்றனர்.
நீண்ட நாட்களாக இங்கு கூலி பிரச்னை நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு தையல் தொழிலாளர்களுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னையில் இருந்து ஒரு பெண் அலுவலர் வந்து, தொழிலாளர் மத்தியில் பேசினர். எந்த முடிவும் எட்டப்படாததால், அவர் பாதியில் கிளம்பி சென்றார்.
இது குறித்து, தையல் தொழிலாளர்கள் கூறியதாவது:
சென்னையில் இருந்து உயர் அதிகாரி வருவதாக கூறி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே எங்களது குறைகளை எல்லாம் மனுவாக எழுதி வைத்திருந்தோம். ஆனால், ஆரம்பம் முதலே எங்களது குறைகளை கேட்காமல், அதிகாரிகள் எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர்.
கூலி குறைவு என்று தைக்காமல் விட்டால் போலீசில் புகார் அளிக்கப்படும் என்றும், உங்களது வாழ்வாதாரத்தை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை என்கின்றனர்.
இது எனது துறை கிடையாது. என்னை பார்க்கச் சொன்னதால், வந்துள்ளேன். மற்றபடி, உங்கள் கூலி பிரச்னைகளை கேட்க வரவில்லை. 10 பைசாவுக்கு லேபில் கிடைக்கும் நிலையில், எதற்கு, 50 பைசா செலவழிக்கிறீர்கள் என்று கேட்டால், அதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்கின்றனர். ஆனால், எங்களுக்கு மட்டும் கூலியை உயர்த்தி வழங்காமல், இஷ்டம் இருந்தால் தையுங்கள். இல்லையெனில், சொசைட்டியை இழுத்து மூடி விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'தெறித்து' ஓடிய அதிகாரி!
சென்னையில் இருந்து வந்த பெண் அதிகாரி தனது பெயரைக்கூட யாரிடமும் கூறவில்லை. செய்தியாளர்கள் வந்ததைக் கண்டு அங்கிருந்து வெளியேறி காரில் ஏறினார். தொழிலாளர்கள் காரை சூழ்ந்ததை தொடர்ந்து, மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வந்தார். இவர் சென்னையில் இருந்து தான் வந்தாரா அல்லது எங்களை மிரட்டுவதற்காக அதிகாரிகள் தரப்பில் இருந்து துாது அனுப்பப்பட்டாரா? என தையல் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.