/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாழடையும் பி.ஏ.பி., திட்ட குடியிருப்புகள் கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை பாழடையும் பி.ஏ.பி., திட்ட குடியிருப்புகள் கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை
பாழடையும் பி.ஏ.பி., திட்ட குடியிருப்புகள் கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை
பாழடையும் பி.ஏ.பி., திட்ட குடியிருப்புகள் கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை
பாழடையும் பி.ஏ.பி., திட்ட குடியிருப்புகள் கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை
ADDED : ஜூலை 31, 2024 02:34 AM

உடுமலை;உடுமலை, குடிமங்கலம் பகுதி கிராமங்களில், கால்வாய் பராமரிப்பு பணியாளர்களுக்கான குடியிருப்புகள், பராமரிப்பின்றி, பாழடைந்தும், பொதுப்பணித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
பி.ஏ.பி., பாசனத்தின் கீழ், பொதுப்பணித்துறை சார்பில், நீர்நிர்வாக பணிகளை மேற்கொள்ள கிராமங்களில் பல்வேறு கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டது. பிரதான மற்றும் கிளை கால்வாய்களின் நீர் நிர்வாகம் முழுவதும், பொதுப்பணித்துறை கால்வாய் பராமரிப்பு பணியாளர்கள் (லஸ்கர்) வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மடைகளுக்கான ஷட்டர்கள் திறப்பு, நீர் பங்கீடு, தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு என இப்பணியாளர்கள், பாசன திட்டத்தில், முக்கிய பங்கு வகித்து வந்தனர். எனவே, திட்டம் செயல்பாட்டுக்கு வந்த போது, பல்வேறு இடங்களில், இப்பணியாளர்களுக்கென குடியிருப்புகள் கட்டப்பட்டன.
சம்பந்தப்பட்ட பகுதியிலேயே பணியாளர்கள் தங்கியிருந்ததால், நீர் நிர்வாக பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணப்பட்டது.
இந்நிலையில், பாசன சபைகள் கட்டுப்பாட்டில் நீர் நிர்வாகம் மாற்றப்பட்டது; காலிப்பணியிடங்கள் நிரப்பாதது போன்ற காரணங்களால், பணியாளர்களுக்கென கட்டப்பட்ட குடியிருப்புகள் பயன்பாடு இல்லாமல் விடப்பட்டது.
இதனால், உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பாசன திட்ட பகுதியில், 30க்கும் மேற்பட்ட இடங்களில், பணியாளர்கள் குடியிருப்பு, பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வருகிறது. குடியிருப்புக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பால் மாயமாகி வருகிறது.
இக்கட்டடங்களை பராமரித்து, மாற்று பயன்பாட்டுக்கு விட வேண்டும் என விவசாயிகள் பல முறை வலியுறுத்தியும், பொதுப்பணித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.