Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கரணம் தப்பினால் மரணம்: வாகன ஓட்டிகள் அச்சம்

கரணம் தப்பினால் மரணம்: வாகன ஓட்டிகள் அச்சம்

கரணம் தப்பினால் மரணம்: வாகன ஓட்டிகள் அச்சம்

கரணம் தப்பினால் மரணம்: வாகன ஓட்டிகள் அச்சம்

ADDED : ஜூன் 12, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;'மில்லிங்' செய்த ரோடுகளில், பல நாட்களாக புதிய தார்ரோடு அமைக்காமல் இருப்பதால், 'டூ வீலர்'களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறை, தார்ரோடு அமைக்கும் பணிகள் தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டது. நகரப்பகுதியில் ரோடு அமைக்கும் போது, கடைகள் மற்றும் வீடுகள் தாழ்வாக மாறி, மழைநீர் புகும் அபாயம் உள்ளது.

இந்நிலையை தவிர்க்க, நெடுஞ்சாலை ரோடுகள் அடுக்கடுக்காக அமைக்காமல், பழைய ரோட்டை லேசாக தோண்டியெடுத்து (மில்லிங்), தார் ரோடு அமைக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

திடீரென, தார் ரோட்டை கீற்றுகளாக தோண்டி எடுக்கும் போது, அவ்வழியாக செல்லும் டூ வீலர்கள் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. லேசாக ரோட்டை கீறிவிட்டதாக நினைத்து செல்லும் போது, டயர் நல்ல நிலையில் இல்லையெனில், சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

ஏனெனில், நெடுஞ்சாலைத்துறை ரோடுகளை 'மில்லிங்' செய்த பின், ஒரு வாரம் முதல், 10 நாட்கள் வரை அப்படியே போட்டு வைக்கின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் ரோடுகளை இவ்வாறு செய்வதால், 'டூ வீலரில்' சென்று வருவோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பல்லடம் - மங்கலம் ரோட்டில், 63 வேலம்பாளையம் அருகே, ரோட்டை 'மில்லிங்' செய்து நீண்ட நாட்களாக பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அவ்வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள், இருளில் சிக்கி சிரமப்படுகின்றனர்.

இதேபோல், பி.என்., ரோடு பகுதியிலும், ரோடு 'மில்லிங்' செய்யப்பட்டுள்ளது. ரோடு மிக உயரமாக மாறிவிடக்கூடாது என்ற நோக்கில், மில்லிங் செய்கின்றனர்; தொலைநோக்கு பார்வையுடன், செய்வதை அனைவரும் வரவேற்கின்றனர். இருப்பினும், 'மில்லிங்' செய்த அதே நாளில் அல்லது அடுத்த நாளிலேயே, தார்ரோடு அமைக்கப்பட வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

ரோட்டை மில்லிங் செய்தால், அதேநாள் அல்லது அடுத்த நாளில் புதிய தார்ரோடு அமைக்கப்பட வேண்டும். மாறாக, ரோட்டை கீறி சேதமாக்கிவிட்டு, வாரக்கணக்கில் பணிகள் துவங்காமல் இருக்க கூடாது. அவ்வாறு விடும் போது, டூ வீலரில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

குடும்பத்துடன், குழந்தைகளுடன் செல்லும் போது, ஆபத்து அதிகம் இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, 'மில்லிங்' செய்யும் ரோடுகளுக்கு, 24 மணி நேரத்துக்குள் தார்ரோடு அமைக்கப்படுவதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us