/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திக்குமுக்காடும் பல்லடம் நகரம் நெரிசலுக்கு தீர்வு காண யோசனை திக்குமுக்காடும் பல்லடம் நகரம் நெரிசலுக்கு தீர்வு காண யோசனை
திக்குமுக்காடும் பல்லடம் நகரம் நெரிசலுக்கு தீர்வு காண யோசனை
திக்குமுக்காடும் பல்லடம் நகரம் நெரிசலுக்கு தீர்வு காண யோசனை
திக்குமுக்காடும் பல்லடம் நகரம் நெரிசலுக்கு தீர்வு காண யோசனை
ADDED : ஜூன் 25, 2024 12:55 AM
பல்லடம்;பல்லடத்தில், கோவை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், அவிநாசி, தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை, கொச்சி உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகளும் இணைகின்றன.
பல்லடம் நகர எல்லைப் பகுதிக்குள்ளேயே இவை இணைவதால், நகரப் பகுதியில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே, பொள்ளாச்சி ரோட்டில் பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால், வாகனங்கள் மாற்று பாதையில் விடப்பட்டு, கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர, சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் வரைபடம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
இதன்படி, ''தேசிய நெடுஞ்சாலையுடன் பல்லடம் - திருப்பூர் ரோடு சந்திக்கும் பகுதியில், திருப்பூர் செல்லும் வாகனங்கள் திரும்புவதற்கு போதிய இட வசதி இல்லாததால், சிக்னல் விழும் வரை வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக, 'ப்ரீ லெப்ட்' இருந்தும், இடது புறம் திரும்ப வேண்டிய வாகனங்கள், திருச்சி, மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள் செல்லும் வரை, காத்திருந்து இடது பக்கம் திரும்ப வேண்டி உள்ளது.
இது தேசிய நெடுஞ்சாலையில் தேவையற்ற போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றாக, தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர் ரோடு இணையும் வகையில், ஒரே ஒரு தரைமட்ட பாலத்தை மட்டும் கட்டினால், திருப்பூர் ரோட்டில் செல்ல வேண்டிய வாகனங்கள் தடையின்றி திரும்பிச் செல்லும். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் தேவையற்ற வாகன நெரிசல் தவிர்க்கப்படும்.
மாநில நெடுஞ்சாலை துறை உரிய ஆய்வு செய்து ஒரே ஒரு தரைமட்ட பாலத்தை மட்டும் கட்டி, வாகன போக்குவரத்து நெரிசலை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி வரைபடத்துடன் கூடிய மனுவை, மாவட்ட நிர்வாகத்துக்கும் அனுப்பியுள்ளார்.