/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாறி மாறி வெயில் - மழை :உடல் நலன் காக்க மருத்துவர்கள் அறிவுரை மாறி மாறி வெயில் - மழை :உடல் நலன் காக்க மருத்துவர்கள் அறிவுரை
மாறி மாறி வெயில் - மழை :உடல் நலன் காக்க மருத்துவர்கள் அறிவுரை
மாறி மாறி வெயில் - மழை :உடல் நலன் காக்க மருத்துவர்கள் அறிவுரை
மாறி மாறி வெயில் - மழை :உடல் நலன் காக்க மருத்துவர்கள் அறிவுரை
ADDED : ஜூன் 08, 2024 11:36 PM

திருப்பூரில் காலையில் வெயில், மாலை அல்லது இரவில் திடீரென குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் மழை, நள்ளிரவு, அதிகாலையில் குளிர் என மாறிமாறி சீதோஷ்ண நிலை நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக மாலை, இரவில் பெய்த மழை காரணமாக லேசான காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவுகளுடன் அரசு மருத்துவமனைக்கு வருவோர் அதிகமாகியுள்ளனர். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்களை பரிசோதிக்கும் போது, அவர்களுக்கு ஒரு வித வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரிய வருகிறது.
இருப்பினும், தொடர் சிகிச்சை, மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்வதால், அவர்களுக்கு உடல் நலம் மீண்டு, வீடு திரும்புகின்றனர். இக்கால கட்டத்தில் குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அரசு டாக்டர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
துாய்மையான சுற்றுப்புறம்
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனை இருப்பிட மருத்துவர் (ஆர்.எம்.ஓ.,) கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
நம்மில் பலர் வீடு, சுற்றுப்புறங்களை துாய்மை வைத்துக் கொள்வதில்லை. சுத்தமில்லாத குடிநீரை பயன்படுத்துகிறோம்; வீட்டை சுற்றித் தேங்கும் நன்னீரால், கொசுக்களால், காய்ச்சல் எளிதில் பரவி விடுகிறது. நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், நம் வீடு, சுற்றுப்புறத்தை முதலில் துாய்மையாக வைக்க வேண்டும்.
ஈரப்பதத்துடன் வீடு இருந்தாலே, இரவில் குளிர் வந்து விடும். எனவே, மழை பெய்த நேரம் தவிர மற்ற நேரங்களில் வீடு, ஜன்னல், கதவுகளை திறந்து சூரிய ஒளி படும் வகையில் வைக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, குளிர்ந்த நீரை அப்படியே அருந்துகின்றனர். அதிகமான குளிர்ந்த நீரை அருந்துவதும், தொண்டை பிரச்னை, சளிக்கு காரணமாகி விடுகிறது.
வெந்நீர் சிறந்தது
சற்று குளிர்ச்சி குறைவாக நீரை அதுவும் குறைந்தளவு அருந்தலாம். வெயிலில் சென்று திரும்பியவுடன் குளிர்ந்த நீரை அப்படியே குடிக்க கூடாது. மாலையில் மழை வந்து விடுவதால், வெந்நீர் அருந்துவது சிறந்தது. முடிந்த வரை சூடான, சத்து நிறைந்த ஆகாரங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
உடல் சோர்வு, லேசான சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனே டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு வருவதால், தான் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே அதிக காரம் கொண்ட மசாலா உணவுகளை தவிர்த்து, ஊட்டசத்து நிறைந்த, எளிதில் ஜூரணிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொண்டால், வயிறு உபாதைகள் ஏற்படாது.
இவ்வாறு, கோபாலகிருஷ்ணன் கூறினார்.
-
டாக்டர் கோபாலகிருஷ்ணன்