Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சில மணித்துளி போதும்; சீக்கிரம் பிரச்னை தீரும் :எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு பிரச்னை; தீர்வு காண்பது எளிதுதான்

சில மணித்துளி போதும்; சீக்கிரம் பிரச்னை தீரும் :எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு பிரச்னை; தீர்வு காண்பது எளிதுதான்

சில மணித்துளி போதும்; சீக்கிரம் பிரச்னை தீரும் :எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு பிரச்னை; தீர்வு காண்பது எளிதுதான்

சில மணித்துளி போதும்; சீக்கிரம் பிரச்னை தீரும் :எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு பிரச்னை; தீர்வு காண்பது எளிதுதான்

UPDATED : ஜூலை 08, 2024 03:02 AMADDED : ஜூலை 07, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
24 மணி நேரமும்குடிநீர் வீண்

திருப்பூர், தாராபுரம் ரோட்டில், சங்கிலி பள்ளம் ஓடை, உஷா தியேட்டர் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து, 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகிறது. மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து தண்ணீர் வெளியேறி, சாலையோரமே குழியாகி விட்டது. மெயின் பைப் லைன் என்பதால், இரவிலும் தொடர்ந்து தண்ணீர் வீணாகிக் கொண்டே இருக்கிறது. இங்குள்ள வங்கி, காம்பளக்ஸ் கடைக்கும் வருவோர் தண்ணீரை தாண்டி குதித்தும், மிதித்தும் வந்து செல்கின்றனர்.

வளைவு பகுதியாக உள்ள கொடுவாய் - திருப்பூர் ரோட்டில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டே இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திருப்பூரில் பல இடங்களில் வாரம், பத்து முதல், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகமே தடுமாற்றத்தில் உள்ள நிலையில், நாள் முழுதும் இவ்வாறு தண்ணீர் வீணாவது அவ்வழியாக செல்வோரை வேதனையடைய செய்துள்ளது.

----

சுத்திகரிப்பு இயந்திரத்தில்

குடிநீருக்கு பதில் காற்று

பல்லடம் அரசு மருத்துவமனையில், தினசரி, 700க்கும் அதிகமான புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்களின் நலன் கருதி, மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் இதை சரியாக பராமரிக்காததால், சமீப நாட்களாக, குடிநீருக்கு பதில் இதில் காற்று மட்டுமே வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சுத்தமான சுகாதாரமான குடிநீர் அவசியம். தனியார் பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் பராமரிக்க வேண்டும். ஆனால், நோயாளிகள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் இதுபோன்ற உபகரணங்களை முறையாக பராமரித்து பொதுமக்களுக்கு பயன்பட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

------

உயரம் குறைந்த பாலம்

தினமும் சிக்கும் லாரிகள்

கோவை -- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில், பெருமாநல்லுார்- வலசுப்பாளையம் பிரிவு சர்வீஸ் ரோடு பாலம் மிக தாழ்வாக உள்ளது.

இந்த வழியாக வரும் கன்டெய்னர் லாரிகள் பாலத்தில் சிக்கி கொள்வது தொடர் கதையாக உள்ளது.

கடந்த வாரம் சிக்கி கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று கடும் சிரமத்திற்கு பின் மீட்கப்பட்டது.

தினமும் 4 முதல் 5 லாரிகள் வரை சிக்கி கொள்கின்றன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

''இந்த சிரமத்தை தவிர்க்க பாலத்தில் இருந்து 50 அடிக்கு முன் பாலத்தின் உயரத்தை அறியும் வகையில் இரும்பு ஆங்கிலில் தடுப்பு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆதியூர் பிரிவு பாலம் வழியாக செல்லலாம் என்று வழிகாட்டிப்பலகையையும் வைக்க வேண்டும்'' என்கின்றனர், லாரி டிரைவர்கள்.

------

ஆழ் குழாய் கிணற்றுக்கான

மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது, அக்ரஹாரப்புத்துார் வசந்தம் நகர்; அப்பகுதியில், 200க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மெயின் வீதியில், தார்ரோடு அமைக்கும் பணி, கடந்த வாரம் நிறைவடைந்தது. தார் ரோடு அமைத்த பிறகு, பக்கவாட்டில் 'கிராவல்' மண் கொட்டி ரோட்டை பாதுகாக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னதாக, பழைய தார்ரோட்டை 'மில்லிங்' செய்து, அதன் மீது கிரஷர் கலவை கொண்டு ரோடு அமைக்கப்பட்டது. அப்போது, கடைசி வீதியில் உள்ள, ஆழ்குழாய் கிணற்றுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம், ஆழ்குழாய் கிணற்றுக்கான மின் இணைப்பு மீண்டும் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தம், எட்டு குறுக்கு வீதிகள் உள்ள நிலையில், ஒரே தொட்டி மட்டும் வைத்து, ஆழ்குழாய் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், இருவீதிக்கு ஒன்று என்ற அளவில் உப்பு தண்ணீர் தொட்டிகளை வைத்து, தினமும் வினியோகிக்க வேண்டும்.

-------------

குறைகேட்பு முகாம்

காலத்தின் தேவை

திருப்பூர் மாவட்டத்தில், ஆறு லட்சத்துக்கும் அதிகமான பனியன் தொழிலாளர்கள் உள்ளனர். வெளிமாநிலங்களை சேர்ந்த, இரண்டு லட்சம் தொழிலாளர்கள், திருப்பூரை சார்ந்து பணியாற்றி வருகின்றனர். பனியன் தொழிலாளர் வாயிலாக, இ.எஸ்.ஐ., - பி.எப்., திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. திருப்பூரில் பி.எப்., உதவி கமிஷனர் அலுவலகம் திறந்த பிறகும், கோவை மாவட்டத்தையே மீண்டும் சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. இ.எஸ்.ஐ., திட்டத்தில் மருத்துவ பணப்பலன்கள் பெறுவது; பி.எப்., திட்டத்தில் கணக்கு மாற்றம் செய்வது; புதிய கணக்கு துவக்குவது; கணக்கில் இருந்து தங்கள் பங்கு தொகையை பெறுவது என, ஒவ்வொரு பணியிலும் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதோடு குளறுபடிகளும் நிகழ்கின்றன. தொழிலாளர்களுக்கு திட்டத்தில் உள்ள 'டிஜிட்டல்' சேவைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுசெயலாளர் சேகர் கூறுகையில்,''இதற்கென திருப்பூர் மாவட்ட நிர்வாகம், குறைகேட்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

-----

உறிஞ்சு குழிகள்

மாசு தடுக்க வழி

ஊராட்சிகளில் குடிநீருக்கு அடுத்ததாக, கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தி தரும் பணி இன்றியமையாததாக உள்ளது. சாக்கடை கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக குளம் குட்டைகளில் கலக்கப்பட்டு நீர்நிலைகள் மாசடைகின்றன. சாக்கடை கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், துர்நாற்றம் வீசுவதும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி பல்வேறு வகையான நோய்கள் பரவுவதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த காலங்களில், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டும், மரங்களுக்கு செல்லும் வகையிலும் கட்டமைக்கப்பட்டன. குடியிருப்புகளில் 'உறிஞ்சு குழி' அமைக்க அவற்றின் அளவைப் பொறுத்து அரசு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதிகாரிகள் இதுகுறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், பொதுமக்களும் இதை அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் முழு முனைப்பு காட்ட வேண்டும்.

----

பூங்காவை சீரழிக்கும்

சமூக விரோதிகள்

பல்லடம் அடுத்த, காரணம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில், பொதுமக்கள் தாவரவியல் பூங்கா அமைத்து பராமரித்து வருகின்றனர்.

''பசுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், தேசிய நெடுஞ்சாலை இடத்தில், சொட்டுநீர் பாசனம் அமைத்து மிகவும் சிரமப்பட்டு நூற்றுக்கணக்கான மரங்களுடன் தாவரவியல் பூங்கா அமைத்து பராமரித்து வருகிறோம். சோலை போல் காட்சியளித்து வருகிறது. இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள், தவறான செயல்களில் ஈடுபட்டு, பூங்காவை சீரழித்து வருகின்றனர். மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் 'பலான' பொருட்கள் என, பூங்காவை நாசமாக்குவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில், போலீசார், இப்பகுதியில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், இப்பகுதி சமூக விரோத செயல்களுக்கு புகலிடமாக மாறிவிடும்'' என்கின்றனர் பொதுமக்கள்.

----





      Our Apps Available On




      Dinamalar

      Follow us