/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அம்மை நோய்க்கு நாட்டு மாடு பலி; தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லை அம்மை நோய்க்கு நாட்டு மாடு பலி; தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லை
அம்மை நோய்க்கு நாட்டு மாடு பலி; தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லை
அம்மை நோய்க்கு நாட்டு மாடு பலி; தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லை
அம்மை நோய்க்கு நாட்டு மாடு பலி; தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லை
ADDED : மார் 14, 2025 12:40 AM
திருப்பூர்; கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அம்மை நோய்பாதிப்பு அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம், காரைக்குட்டைப்புதுாரில் 5 வயதுடைய நாட்டு மாடு ஒன்று அம்மை நோய் பாதிப்பால் உயிரிழந்தது.
அவிநாசி சுற்றுப்பகுதியில் இதுபோல் கால்நடை அதிகளவில் தொடர்ந்து பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
தடுப்பூசி முகாம்கள் குறித்து உரிய வகையில், தகவல் இல்லை; தடுப்பூசிகள் குறைவாக கொண்டு வரப்படுவதால் இது போல் பாதிப்பு ஏற்படுகிறது, என்று கால்நடை வளர்ப்போர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கால்நடை பராமரிப்பு துறையினர் கூறியதாவது:
கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் உரிய கால இடைவெளியில் அம்மை தடுப்பு, வாய்ச்சப்பை, கோமாரி நோய் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் போடப்படுகிறது.
அம்மை நோய் தடுப்பூசியானது ஆண்டுக்கு ஒரு முறை அனைத்துப் பகுதியிலும் தேவையான அளவு அனுப்பி வைத்து முகாம் மூலம் செலுத்தப்படுகிறது. தடுப்பூசி முகாம்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் தகவல் அளித்து நடத்தப்படுகிறது.
ஒரு சிலருக்கு இந்த தகவல் போய்ச் சேராமல் விடுவது, முகாம் சமயத்தில் அவர்களால் வர இயலாமல் போவது, முகாமுக்கு கால்நடைகளை கொண்டு வந்து சேர்ப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் விடுபட்டு போக வாய்ப்பிருக்கிறது.
நோய் பாதிப்பு குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக நேரில் சென்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கால்நடை வளர்ப்போர் கூறுகையில், 'தடுப்பூசி முகாம் குறித்து அனைத்து கிராமங்களிலும் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு தகவல் சென்று சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
பால் சொசைட்டிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம் வாயிலாக இதனை மேற்கொண்டால் அனைத்து தரப்பினரும் பயன் பெறுவர்,' என்றனர்.