/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிலத்தடி நீரை பாழாக்கும் ஆலைகள் :கரைப்புதுார் கிராம மக்கள் கவலை நிலத்தடி நீரை பாழாக்கும் ஆலைகள் :கரைப்புதுார் கிராம மக்கள் கவலை
நிலத்தடி நீரை பாழாக்கும் ஆலைகள் :கரைப்புதுார் கிராம மக்கள் கவலை
நிலத்தடி நீரை பாழாக்கும் ஆலைகள் :கரைப்புதுார் கிராம மக்கள் கவலை
நிலத்தடி நீரை பாழாக்கும் ஆலைகள் :கரைப்புதுார் கிராம மக்கள் கவலை
ADDED : ஜூலை 08, 2024 10:50 PM

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு, பல்லடம் ஒன்றியம் கரைப்புதுார் ஊராட்சி மக்கள், சாயம் கலந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்தனர். பெட்ரோலை போல் இருந்த சாயம் கலந்த தண்ணீரை ஏந்தியவாறு, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அப்பகுதியினர் கூறியதாவது:
கரைப்புதுார் ஊராட்சியில், அபிராமிநகர், லட்சுமிநகர், வ.உ.சி., நகர், கரைப்புதுார் பகுதிகளில், மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத சாய ஆலைகள் அதிக எண்ணிக்கையில் இயங்குகின்றன. பெரும்பாலான சாய ஆலைகள், சாயக்கழிவுநீரை முறையாக சுத்திகரிப்புக்கு அனுப்புவதில்லை. செலவினங்களை குறைப்பதற்காக, மனசாட்சியே இல்லாமல், ஆழ்துளை கிணறுகளுக்குள் சாயக்கழிவுநீரை செலுத்துகின்றனர். இதனால், சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது.
விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில், தண்ணீர் பச்சை, சிவப்பு நிறமாகி, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இன்றி நாங்கள் பரிதவித்துவருகிறோம். சாயம் கலந்த தண்ணீரால், தோல் பாதிப்பு, இதர கொடிய நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதுகுறித்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், சப்கலெக்டர் சவுமியாவிடம் மனு அளித்தோம். ஒப்புக்கு, ஒரே ஒரு நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டித்தனர்; அடுத்தகட்ட நடவடிக்கை எதுமில்லை.
மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இருந்தும் எந்த பயனுமில்லை; சாய ஆலைகளின் விதிமீறல்கள் அனைத்துக்கும், துணைபோகின்றனர். ஒரு சாய ஆலை தேக்கிவைத்துள்ள சாயக்கழிவுநீர், சுற்றுச்சுவரிலிருந்து பீறிட்டு வெளியேறி, அருகிலுள்ள கிணற்றில் கலந்துவருகிறது. இதை தட்டிக்கேட்கவோ, நடவடிக்கை எடுக்கவோ ஆளில்லை. மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளிப்பதும், ரயிலில் தலைவைத்து சாவதும் ஒன்றுதான்.
கரைப்புதுாரில், சுற்றுச்சூழலை பாழ்படுத்திவரும் சாய ஆலைகள் மீது, கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். விதிமீறல் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காத மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரியை பணியிட மாறுதல் செய்யவேண்டும். இல்லையென்றால், அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, மக்கள் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
----------------------------
கரைப்புதுார் ஊராட்சி, லட்சுமி நகர் பொதுமக்கள், பாட்டிலில் மாசடைந்த நீருடன், கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.