Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ உப்பாற்று ஓடையில் 22 இடங்களில் உடைப்பு * 7 மாதங்களாக சீரமைக்கப்படாததால் விவசாயிகள் கவலை

உப்பாற்று ஓடையில் 22 இடங்களில் உடைப்பு * 7 மாதங்களாக சீரமைக்கப்படாததால் விவசாயிகள் கவலை

உப்பாற்று ஓடையில் 22 இடங்களில் உடைப்பு * 7 மாதங்களாக சீரமைக்கப்படாததால் விவசாயிகள் கவலை

உப்பாற்று ஓடையில் 22 இடங்களில் உடைப்பு * 7 மாதங்களாக சீரமைக்கப்படாததால் விவசாயிகள் கவலை

ADDED : ஜூலை 19, 2024 05:18 PM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி:

துாத்துக்குடி, திருநேல்வேலி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, துாத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் குளத்தில் காலாங்கரை பகுதியில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் நகருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

மேலும், கோரம்பள்ளம் குளத்தில் உள்ள 24 கண் மடையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் உப்பாற்று ஓடை வழியாக கடலுக்கு வெளியேற்றப்பட்டது. தண்ணீர் அழுத்தம் காரணமாக, உப்பாற்று ஓடையில் 22 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு ஏழு மாதங்கள் கடந்த நிலையில், உப்பாற்று ஓடையில் ஏற்பட்ட உடைப்பு இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உப்பாற்று ஓடை ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி கூறியதாவது:

கோரம்பள்ளம் குளத்தின் மூலம் 5000 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. இதில், உப்பாற்று ஓடை பாசனத்தில், 2000 ஏக்கரில் நெல், வாழை விவசாயம் நடக்கிறது. ஏழு மாதங்களுக்கு முன், கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் உப்பாற்று ஓடையில் 22 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

உடைப்பு இன்னும் சரி செய்யப்படாமல் இருப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். செப்டம்பர் மாதத்துக்குள் உடைப்புகளை சரி செய்யாவிட்டால் அடுத்த மழையில் மீண்டும் பாதிப்பு ஏற்படும்.

கோரம்பள்ளம் குளத்தில் உள்ள 24 கண் மடையில் ஒரு மடையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் உப்பாற்று ஓடை பாசனத்தில் அதிக பாதிப்பு ஏற்படும். எனவே, அதிகாரிகள் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக உடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோரம்பள்ளம் குளத்தில் கசிவு

மழை, வெள்ளத்தின்போது, துாத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் காலாங்கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேரடியாக பாதிப்பை பார்வையிட்டு உடனடியாக உடைப்பை சரி செய்து கரையை பலப்படுத்த உத்தரவிட்டார். சில மாதங்களில் உடைப்பு சரி செய்யப்பட்டாலும், அதில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. அதை தற்காலிமாக சீரமைக்கும் பணி நடக்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us