ADDED : ஜூலை 30, 2024 06:31 AM
மதுரை : துாத்துக்குடி மாவட்டம் திருசெந்துாரில் கோயில் அருகே உள்ள மயானத்தை அகற்ற தடை கோரிய வழக்கில், மாற்று இடம் ஒதுக்கீட்டிற்கான ஆவணம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் சுப்பிரமணியபுரம் பிரகாஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்செந்துார் கடற்கரையில் அய்யா வைகுண்ட சுவாமி கோயில் உள்ளது. அருகே மயானம் உள்ளது. சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடியில் மேம்பாடு, கட்டட விரிவாக்கப் பணி நடக்கிறது. மயானத்தை பயன்படுத்தவிடாமல் எங்கள் ஊர் மக்களை சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்தினர் தடுக்கின்றனர். மயானத்தை அகற்றுவது குறித்து எங்களுக்கு நோட்டீஸ் அளிக்கவில்லை.
துாத்துக்குடி கலெக்டர், கோயில் இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினோம். மயானத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும். மாற்று இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மயானத்திற்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது.
அதற்குரிய ஆவணங்களை 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். கலெக்டர், கோயில் இணைக் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.