/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் புதிய மைல்கல் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் புதிய மைல்கல்
கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் புதிய மைல்கல்
கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் புதிய மைல்கல்
கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் புதிய மைல்கல்
ADDED : ஜூலை 25, 2024 11:58 PM
துாத்துக்குடி:மத்திய பட்ஜெட் குறித்து, இந்திய கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
மத்திய பட்ஜெட்டில் இந்திய கடல் பொருட்கள் துறையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில், குறிப்பாக இறால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மீது கவனம் செலுத்தப்பட உள்ளன. இறால் குஞ்சுகளுக்கு கரு இனப்பெருக்க மையங்களை நிறுவ கணிசமான நிதியுதவி வழங்க அரசு உறுதியளித்துள்ளது.
இந்த முன்முயற்சி இறக்குமதி செய்யப்பட்ட ப்ரூட்ஸ்டாக் மீதான இந்தியா நம்பியிருப்பதை வெகுவாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொழிலில் ஆண்டுக்கு, 150 ரூபாய் கோடி வரை சேமிக்க முடியும். குஞ்சு பொரிப்பகங்கள் கணிசமான அளவில் பயனடைவர். இ ப்ரூட்ஸ்டாக் விலையில் 50 சதவீதம் சேமிக்கப்படும். இறால் விதை விலையில் 30 சதவீதம் குறைப்பால் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி இறால் வளர்ப்பு, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கு நிதியளிப்பதில் முக்கிய பங்காற்றும். இத்திட்டத்தின் கீழ், 80 சதவீதம் திட்ட செலவினத்தையும், மூன்று சதவீதம் வரை வட்டி மானியத்தையும் உள்ளடக்கியதாகும். உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிகளை அணுகுவதால், மொத்தம் 639 ஏற்றுமதி பதப்படுத்தும் அலகுகள் பயனடையும்.
மீன் லிபிட் எண்ணெய், மீன் எண்ணெய், அல்கல் பகா எண்ணெய் ஆகியவற்றுக்கு எந்த இறக்குமதி வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீன் குஞ்சு பொரிப்பகத்தில் உள்ள முக்கிய ஊட்டச்சத்து உள்ளீடுகளாக உள்ள ஆர்ட்டிமியா மற்றும் ஆர்ட்டிமியா சிஸ்ட்கள் எந்தவித இறக்குமதி வரியில் இருந்தும் முழுதுமாக விலக்களிக்கப்பட்டுள்ளன.
அடிப்படை சுங்கவரி, வன்னாமி மற்றும் கருப்பு புலி புரோட்ஸ்டாக், பாலிச்சீட் புழுக்கள், மீன் மற்றும் இறால் தீவனம் போன்ற அத்தியாவசிய மீன் குஞ்சு பொரிப்பக உள்ளீடுகளின் மீதான அடிப்படை சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பூச்சி உணவு மற்றும் ஒற்றை செல் புரதத்திற்கான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கடல் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு பிரேடெட் பவுடருக்கு, 30 சதவீதம் இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி வருவாயில் கடல் பொருட்கள் துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த நிதியாண்டில், 60,000 கோடி ரூபாய் அளவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஆதரவு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும் நிலையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செயல்பாடுகளில் புதிய மைல் கல்லை இந்த துறை அடையும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.