/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பழவேற்காடில் வீணாகி வரும் சுனாமி குடியிருப்புகள் புதுப்பித்து வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்படுமா? பழவேற்காடில் வீணாகி வரும் சுனாமி குடியிருப்புகள் புதுப்பித்து வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்படுமா?
பழவேற்காடில் வீணாகி வரும் சுனாமி குடியிருப்புகள் புதுப்பித்து வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்படுமா?
பழவேற்காடில் வீணாகி வரும் சுனாமி குடியிருப்புகள் புதுப்பித்து வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்படுமா?
பழவேற்காடில் வீணாகி வரும் சுனாமி குடியிருப்புகள் புதுப்பித்து வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்படுமா?
ADDED : மே 22, 2025 02:29 AM

பொன்னேரி:பழவேற்காடு மீனவப் பகுதியில், சுனாமிக்கு பின் வாழ்வாதார திட்டத்தின் வாயிலாக, 2007ல் மீனவ கிராமங்களில், 2,226 சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதில், பழவேற்காடு கோரைக்குப்பம் மீனவர்களுக்காக, தாங்கல்பெரும்புலம் கிராமத்தில், 101 குடியிருப்புகள் கட்டப்பட்டன.
ஒவ்வொரு வீடும், 2.85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அதே பகுதியில் சமுதாய கூடம், சத்துணவு கூடம், குடிநீர் மேல்நிலை தொட்டி, மின் இணைப்பு, குடிநீர் குழாய், சுடுகாடு வசதி என, தேவையான உள்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.
மற்ற மீனவ கிராமங்களைச் சேர்ந்தோர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சுனாமி குடியிருப்புகளுக்கு உடனடியாக குடியேறினர்.
அதேசமயம் கோரைக்குப்பம் மீனவர்கள், தங்களுக்கான சுனாமி குடியிருப்புகள் நீண்ட தொலைவில் இருப்பதாகவும், தொழில் பாதிக்கும் எனவும் கூறி குடியேற மறுத்துவிட்டனர்.
கோரைக்குப்பம் மீனவர்கள், புதிய சுனாமி குடியிருப்புகளில் குடியேறாத நிலையில், அவை பயன்பாடின்றி வீணாகின.
வீடுகளுக்கு அமைக்கப்பட்ட மின்கம்பங்கள், மின்கம்பிகள், வீட்டின் உட்பகுதியில் மின்சாதனப் பொருட்கள், கதவு, ஜன்னல், குடிநீர் குழாய்கள் என, அனைத்தும் சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டன.
இந்த 101 சுனாமி குடியிருப்புகள், மற்ற கட்டமைப்புகள் என, 3 கோடி ரூபாய் செலவிட்டு பயன்பாடின்றி வீணாகி வருகிறது. இது, சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சரியான திட்டமிடல் இன்றி மேற்கண்ட குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. ஒருபுறம் வீணாகி வரும் சுனாமி குடியிருப்புகள், மறுபுறம் கோரைக்குப்பம் மீனவர்கள் கடற்கரையை ஒட்டி ஆபத்தான வாழ்க்கையை தொடரும் நிலை உள்ளது.
புயல், மழை காலங்களில் அச்சத்துடன் இருக்கின்றனர்.
வீடு இல்லாமல் நுாற்றுக்கணக்கானோர் சாலையோரங்களிலும், ஆறு, ஏரிக்கரைகளின் மீதும் குடிசைகளில் வசிக்கின்றனர். ஆனால், இங்கு கட்டப்பட்ட குடியிருப்புகள் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, குடியிருப்புகளை புதுப்பித்து, வீடு இல்லாதவர்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.
அதேசமயம், கடற்கரை கிராமமாக உள்ள கோரைக்குப்பம் மீனவர்களுக்கும், அவர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அதே பகுதியில் குடியிருப்புகளை ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.