Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது எப்போது? பொன்னேரி விவசாயிகள் தவிப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது எப்போது? பொன்னேரி விவசாயிகள் தவிப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது எப்போது? பொன்னேரி விவசாயிகள் தவிப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது எப்போது? பொன்னேரி விவசாயிகள் தவிப்பு

ADDED : செப் 11, 2025 03:18 AM


Google News
Latest Tamil News
பொன்னேரி:சொர்ணவாரி பருவத்திற்கு, அறுவடை பணிகள் துவங்க உள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி வேளாண் வட்டாரங்களில், சொர்ணவாரி பருவத்திற்கு, 35,000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. நெற்பயிர்கள் சீரான வளர்ச்சியை பெற்று, தற்போது அவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

மேற்கண்ட வேளாண் வட்டாரங்களில், தற்போது வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால், அறுவடை பணிகளை துவக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

ஒரு சில விவசாயிகள் சம்பா பருவத்திற்கு விளைநிலங்களை தயார்படுத்த வேண்டிய நிலையில், அறுவடை பணிகளை துவக்கியுள்ளனர்.

அவர்கள் வெளிச்சந்தை வியாபாரிகளிடம், 78 கிலோ மூட்டை, 1,300 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இது, நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழக அரசு நிர்ணயித்த விலையை விட மிகவும் குறைவு.

உரிய நேரத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்காததால், வேறு வழியின்றி வெளிச்சந்தையில் விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, தமிழக அரசு, விவசாயிகள் விளைவித்த நெல்லை, 100 கிலோ மூட்டை, 2,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்து கொள்வதாக அறிவித்துள்ளது.

பதினைந்து நாட்களுக்கு விவசாயிகள் அறுவடை பணிகளை முடித்து, சம்பா பருவத்திற்கு விளைநிலங்களை தயார்படுத்த வேண்டும். நேரடி கொள்முதல் நிலையம் இல்லாததால், வெளிச்சந்தையில் வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

காலதாமதமாக கொள்முதல் நிலையங்களை திறப்பதால், வியாபாரிகள் தான் பயனடைவர். விவசாயிகளிடம், வியாபாரிகள் வாங்கும் நெல் மூட்டைகள் தான் கொள்முதல் நிலையங்களுக்கு போலி ஆவணங்கள் வாயிலாக வந்து சேரும்.

விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு தான் ஏற்படும். எனவே, உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us