Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பிரசவத்தில் குழந்தை இறப்பை கட்டுப்படுத்துவதில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்மாதிரி மாநில சராசரியை விட குறைவு

பிரசவத்தில் குழந்தை இறப்பை கட்டுப்படுத்துவதில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்மாதிரி மாநில சராசரியை விட குறைவு

பிரசவத்தில் குழந்தை இறப்பை கட்டுப்படுத்துவதில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்மாதிரி மாநில சராசரியை விட குறைவு

பிரசவத்தில் குழந்தை இறப்பை கட்டுப்படுத்துவதில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்மாதிரி மாநில சராசரியை விட குறைவு

ADDED : செப் 07, 2025 10:17 PM


Google News
திருவள்ளூர்:பிரசவத்தின் போது, குழந்தை இறப்பை கட்டுப்படுத்துவதில், திருவள்ளூர் மாவட்டம் முன்னோடியாக உள்ளது. மருத்துவர் களின் தொடர் கண்காணிப்பால், மாநில சராசரியை விட, இறப்பு சதவீதம் குறைவாக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ஒன்பது வட்டார மருத்துவமனை, இரண்டு அரசு வட்டம் சாரா மருத்துவமனை, 68 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 358 துணை சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அதிகளவில் கர்ப்பிணியர் வருகின்றனர்.

குறைபாடு கடந்த 30 ஆண்டு களுக்கு முன், முறையான விழிப்புணர்வு, தொடர் கண்காணிப்பு, மருத்துவ சிகிச்சை வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பிரசவத்தின் போது சிசு அல்லது தாய் இறப்பு அதிகளவில் இருந்தது.

தற்போது, மருத்துவ துறையில் பல்வேறு நவீன வசதிகள் வந்து விட்டன. இதன் காரணமாக, பிரசவத்தின் போது, சிசு மற்றும் தாயின் இறப்பு சம்பவம் கட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது.

பொதுவாக, கர்ப்ப காலங்களில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு இல்லாமல், பிரசவ காலத்தில் பிறக்கும் குழந்தைகள் இறந்து விடுகின்றன.

மேலும், பிரசவத்தின் போது மூச்சுத் திணறல், 'பிளாசெண்டா' எனப்படும் நஞ்சுக்கொடி பிரிதல், நீண்ட காலத்திற்கு பின் கர்ப்பமடைதல், நோய் தொற்று மற்றும் பிறவிக் குறைபாடு போன்ற காரணங்களாலும், பிரசவ காலத்தில் மரணம் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில், 1,000 குழந்தைகளுக்கு சராசரியாக, 7.5 சதவீதம் என்ற விகிதத்தில் பிரசவ கால மரணங்கள் உள்ளன. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில், மாநில சராசரியை விட, பிரசவ கால மரணங்கள் குறைந்துள்ளது.

அந்த வகையில், குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தி, திருவள்ளூர் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. இதற்கு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதே முக்கிய காரணம்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் மருத்துவர் அம்பிகா சண்முகம் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமான கர்ப்பிணியர் பிரசவத்திற்காக வருகின்றனர். இதில், அரசு மருத்துவமனை களுக்கு கர்ப்பிணியர் அதிகளவில் வருகின்றனர்.

இதற்கு காரணம், அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவர்களின் கனிவான பேச்சு மற்றும் நவீன கருவிகளுடன் சிகிச்சை அளித்து வருவது தான்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பொன்னேரி அரசு மருத்துவமனைகளில், விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளை பராமரிக்க 'சீமாங்' பிரிவு செயல்பட்டு வருகிறது.

'ரோல் மாடல்' பிரசவ காலத்தில் சிசு மற்றும் தாயின் இறப்பை தடுக்க, மருத்துவ குழுவினர், கர்ப்பிணியரை தொடர்ந்து கண்காணித்து, ஆலோசனை அளித்து வருகிறோம்.

கலெக்டர் பிரதாப் அறிவுரையின்படி, தொடர்ந்து கண்காணிப்பு கூட்டம் நடத்தி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஆலோசனை அளித்து வருகிறோம். இதன் காரணமாக, பிரசவத்தின் போது சிசு இறப்பு, மாநில சராசரியை விட வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த 2022 - 23ல், 9 சதவீதமாக இருந்த சிசு இறப்பு விகிதம், 2023 - 24 மற்றும் 2024 - 25ம் ஆண்டுகளில், 7 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், மாநில சராசரியான, 8.5 சதவீதத்தைவிட குறைந்து, மாநில அளவில், திருவள்ளூர் மாவட்டம், 'ரோல் மாடல்' ஆக திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

4 ஆண்டுகளில் நடந்த பிரசவம், பிறந்த குழந்தைகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை ஆண்டு 2022 2023 2024 2025 (ஆக., வரை) மொத்த பிரசவம் 18,745 20,480 19,721 6,390 குழந்தைகள் இறப்பு 305 246 218 69 சதவீதம் 9 7 7 7.1



இறப்பை தடுக்க மருத்துவ துறை எடுத்து வரும் நடவடிக்கை


1 ஆரம்ப சுகாதார வட்ட அளவில், அதிக ஆபத்தில் உள்ள தாய்மார்களை அடையாளம் காணுதல்

2 கிராம சுகாதார செவிலியர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் குழுவால் தொடர்ந்து கண்காணித்தல்

3 பிரசவ திட்டமிடல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பான பிரசவம் எங்கு நடைபெற வேண்டும் என்பதை சரியாக நிர்ணயித்தல்

4 மருத்துவ கல்லுாரி வளாகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் கர்ப்பிணியர் சேவை அழைப்பு மையம் வாயிலாக, அதிக ஆபத்தில் உள்ள தாய்மார்களை தொடர்ந்து கண்காணித்து, ஆலோசனை வழங்குதல் மற்றும் அவசர நிலைகளில் அழைப்புகளை மேற்கொள்வது

5 பாதுகாப்பான பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதல்படி ஆய்வு கூட்டம் நடத்துதல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us