/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அடிப்படை வசதியில்லாத திருநின்றவூர் ரயில் நிலையம்அடிப்படை வசதியில்லாத திருநின்றவூர் ரயில் நிலையம்
அடிப்படை வசதியில்லாத திருநின்றவூர் ரயில் நிலையம்
அடிப்படை வசதியில்லாத திருநின்றவூர் ரயில் நிலையம்
அடிப்படை வசதியில்லாத திருநின்றவூர் ரயில் நிலையம்
ADDED : ஜூன் 16, 2025 02:16 AM

திருநின்றவூர்:திருநின்றவூர் ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகள், ஆறு இருப்பு பாதைகள் உள்ளன. தினமும் 75,000க்கும் மேற்பட்டோர், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாலை வேளையில் நான்காவது, ஐந்தாவது நடைமேடையில் கஞ்சா, மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது.
இதனால், பயணியர் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். அதேபோல, மூன்றாவது நடைமேடையில் கூரை படுமோசமாக காட்சி அளிப்பதால், மழை காலத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு, பயணியர் ஒதுங்க வழியின்றி அவதிப்படுகின்றனர்.
அதேபோல, மூன்றாவது நடைமேடையில் உள்ள கழிப்பறை, கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்பாடின்றி மூடியே கிடக்கிறது. மேலும், போதுமான 'பார்க்கிங்' வசதி இல்லாததால், பயணியர் இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பின்றி சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போகும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, பாதுகாப்பு பணியில் போதுமான ரயில்வே போலீசாரை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர் முருகையன் கூறுகையில், ''திருநின்றவூர் ரயில் நிலையத்தில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பயணியர், ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடந்து வருகின்றனர். அதேபோல, திருநின்றவூர் ரயில் நிலையத்தில், குடிநீர், கழிப்பறை என, எந்த அடிப்படை வசதியும் ரயில்வே நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை,'' என்றார்.