Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மின் இணைப்பு பெற முடியாமல் 15 ஆண்டுகளாக இருளில் தவிப்பு

மின் இணைப்பு பெற முடியாமல் 15 ஆண்டுகளாக இருளில் தவிப்பு

மின் இணைப்பு பெற முடியாமல் 15 ஆண்டுகளாக இருளில் தவிப்பு

மின் இணைப்பு பெற முடியாமல் 15 ஆண்டுகளாக இருளில் தவிப்பு

ADDED : ஜன 01, 2024 06:20 AM


Google News
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில் தொல்லியல் துறை சார்ந்த நிலம் உள்ளது. இதில் 150 ஏழை குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மின் இணைப்பு வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மின் இணைப்பு பெறுவதற்கு தொல்லியல் துறை மற்றும் வருவாய் துறை சார்ந்த தடையில்லா சான்று தேவைப்படுகிறது.

இதற்காக, அப்பகுதி மக்கள், செங்கல்பட்டு மாவட்டம் உருவானதில் இருந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நெல்லிகுப்பம் ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்திலும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி பேசினர்.

இதன் விளைவாக தற்போதைய ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி, அங்கு வீடு கட்டி மின் இணைப்பு இல்லாமல் உள்ள குடும்பங்களின் விவரங்களை சேகரித்து, மத்திய அரசின் நிதி மற்றும் தொல்லியல் துறை, மின் துறை அமைச்சரை அணுகுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து ஊராட்சி தலைவர், பிரதமர் அலுவலகம், தொல்லியல் துறை, மின்சாரத்துறைக்கு மின் இணைப்பு தொடர்பான, பொதுமக்களின் கோரிக்கை மனுவை தபால் வாயிலாக அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்போரூர் வட்டம், நெல்லிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதி 2007ல், அளவீடு செய்வதற்கு முன் சர்வே எண் 287/2எ, 111/1 தொல்லியல் துறை வசமானது.

இதனால் நாங்கள் வசிக்கும் பகுதியில், மின் இணைப்பு பெற முடியாமல் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மின்வாரியம், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து நடவடிக்கை இல்லாததால் இருளில் தவிக்கிறோம். கல்லுாரி, பள்ளி செல்லும் மாணவர்கள் மின் இணைப்பு இல்லாமல் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது ஏற்பட்ட 'மிக்ஜாம்' புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதில் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.

மேற்கண்ட சர்வே எண்ணில் உள்ள, குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும். மனுவை பரிசீலனை செய்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மின் வாரியத்திற்கு, எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்பு தவிர, அரசு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வசிக்கும் மக்களுக்கு பட்டா, மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி 2007ம் ஆண்டிற்கு முன், இங்குள்ளவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின் மின் இணைப்பு வழங்கவில்லை. தற்போது புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகிறது.

அதன்படி பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா, மின் இணைப்பு இல்லாதவர்களுக்கு மின் இணைப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2024ல் லோக்சபா தேர்தல் வருவதையொட்டி, மாநில அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, இப்பகுதி மக்களுக்கு பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- வருவாய் துறை மற்றும்

மின்துறை அதிகாரிகள்

- நமது நிருபர்- .





      Our Apps Available On




      Dinamalar

      Follow us